Breaking News

ஆசியக் குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற காஞ்சிபுரம் மாணவிகுக ரூ.10 ஆயிரம் நிதி வழங்கிய மக்கள் நீதி மையம்

காஞ்சிபுரம், அக்.22:

ஆசிய நாடுகள் அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்த காஞ்சிபுரம் மாணவி நீனாவுக்கு மக்கள் நீதி மையத்தின் மாநில செயலாளர் எஸ்.கே.பி.கோபிநாத் செவ்வாய்க்கிழமை ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.


காஞ்சிபுரம் புத்தேரி பெரிய மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் நீனா(21)இவர் காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் முதுகலை தமிழ் 2வது ஆண்டு படித்து வருகிறார். 

இவர் அண்மையில் கம்போடியாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்றார்.55 கிலோ எடைப்பிரிவில் பாயிண்ட் பைட் எனும் பிரிவில் தங்கப்பதக்கமும்,லைட் காண்டாக்ட், பார்ம்ஸ் ஆகிய இரு பிரிவுகளில் வெள்ளிப்பதக்கமும் பெற்று சாதனை படைத்தார்.

ஆசிய அளவில் 22 நாடுகளைச் சேர்ந்த 800 பேர் பங்கேற்றதில் தமிழகத்திலிருந்து 45 பேர் கலந்து கொண்டனர்.இதில் தமிழகத்திலிருந்து தங்கப் பதக்கம் வென்ற ஒரே மாணவி என்ற பெயரையும் தக்க வைத்தார்.

இத்தகவலறிந்து மக்கள் நீதி மையத்தின் மாநில செயலாளரும், வராஹி லட்சுமி பட்டு நிறுவனத்தின் உரிமையாளருமான எஸ்.கே.பி.கோபிநாத் சாதனை மாணவி நீனாவுக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவியாக வழங்கினார்.

இந்நிகழ்வின் போது பசுமைக் காஞ்சி தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள்,நீனாவின் பெற்றோர்கள் ஆகியோரும் உடன் இருந்தனர்.

No comments

Thank you for your comments