மகோகனி மரக்கன்றுகளை நட்டு பயனடைந்த விவசாயிகள் நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் முதலமைச்சருக்கு நன்றி
கோவை :
கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் வட்டாரம் தென்கரை கிராமத்தில் 'வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் 750 மகோகனி மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கப்பட்டு வருவது குறித்து, நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டது.
பசுமைபரப்பை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருவாயை பெருக்கவும், 'வேளாண் காடு வளர்க்கும் திட்டத்துக்கு, கோயம்புத்தூர் மாவட்த்திற்கு 3 இலட்சம் மரக்கன்றுகள் இலக்கு ஒதுக்கீடு செய்து சுற்றுச்சூழலை பாதுகாத்து, விவசாய நிலங்களில் நிரந்தர பசுமையை உருவாக்க 'வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டம்' வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் இலவசமாக மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு, விவசாய நில வரப்புகள், மற்றும் குறைந்த செலவில் விவசாய நிலங்களிலும் நடவு செய்யப்பட்டு, மரம் சார்ந்த விவசாயம் ஊக்குவிக்கப்படும். தேக்கு, ஈட்டி, மகோகனி, மருது, வேம்பு, மலை வேம்பு, நாவல், பெருநெல்லி, செம்மரம், புங்கன், வேங்கை, மற்றும் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு தரமான மரக்கன்றுகள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
ஊடுபயிராக மரங்கள் வளர்க்கவும், திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நிரந்தர வைப்புத் தொகை கிடைப்பதுடன், மண் வளத்தை அதிகப்படுத்தி, பசுமைப் பரப்பு, மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்த இத்திட்டம் பெரிதும் பயன்படுகிறது. 1 ஏக்கருக்கு 80 மரங்கள் வரை வரப்பு ஓரங்களில் நட முடியும். 10 அடிக்கு ஒன்று என்ற விதத்தில் நடலாம். 10 வருடங்களில் ஒரு மரம் ரூ.5,000/- என்று மதிப்பு வைத்தால் கூட, ரூ. 4 இலட்சம் வருவாயாக கிடைக்கும். அனைவரும் வரப்பு ஓரங்களில் மரங்கள் நட்டால் நல்ல வருவாய் கிடைப்பதுடன், பசுமைப் பரப்பும் அதிகரிக்கும்.
இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த தொண்டாமுத்தூர் விவசாயி து.அன்பரசு தோட்டத்தில் 750 மகோகனி மரக்கன்றுகளை தென்னை மரங்களுக்கு இடையில் நடவு செய்துள்ளதை நேரில் பார்வையிட்டு நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் மூலம் இத்திட்டத்தின் பயன் குறித்து விவசாயிடம் கருத்துக்கள் கேட்டறியப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளி தொண்டாமுத்தூர் விவசாயி து.அன்பரசு தெரிவித்ததாவது,
நான் தொண்டாமுத்தூர் வட்டாரம் தென்கரை கிராமத்தில் 5 ஏக்டர் பரப்பரப்பில் கடந்த 30 வருடங்களாக தென்னை விவசாயம் செய்து வருகிறேன். தென்னை மரங்களுக்கு இடையே காலியாக இருக்கும் நிலப்பகுதியில் ஊடு பயிராக மகோகனி மரங்களை சாகுபடி செய்வதற்கான வேளாண்மைத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டபோது வேளாண்காடுகள் திட்டத்தின் கீழ் மரக்கன்று சாகுபடி செய்வது விளக்கினார்கள்.
மேலும் தேக்கு மரங்களுக்கு அடுத்த படியாக இருப்பதால் இம்மரங்களின் தேவை அதிகமாக உள்ளது. தற்போது ஒருடன் மகோகனி மரத்தின் விலை ரூ.8500-யாக உள்ளது. எனவே எனது நிலத்தில் சுமார் 750 மகோகனி மரக்கன்றுகளை தென்னைமரங்களுக்கு இடையில் நடவுசெய்து பராமரித்து வருகிறேன். இதன்மூலம் எனக்கு பராமரிப்பு செலவு மற்றும் நீரின் தேவைகள் குறைந்து காணப்படுகிறது.
தென்னை மரங்கள் காற்றுத் தடுப்பு வேலியாக செயல்படுவதால், அதிக காற்றினால் பயிர்களும் மற்ற மரங்கள் சேதமாகாமல் பாதுகாப்பதுடன் தென்னை அதிக வருமானமும் கிடைக்கிறது. தற்போது மகோகனி மரங்கள் 6 அடிவரை நன்கு வளர்ந்துள்ளது.
இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி என் போன்ற விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நிறைந்தது மனசு நிகழ்ச்சியின் வாயிலாக என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

No comments
Thank you for your comments