Breaking News

உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக  மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில் 50 பயனாளிகளுக்கு ரூ. 52.48 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் வழங்கி,  தமிழ்வழியில் பயின்று கல்வி மற்றும் தனித்திறன்களில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு காமராஜர் விருது மற்றும் பரிசுத் தொகைக்கான காசோலையினையும் வழங்கினார்கள்.


இந்நிகழ்வினை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் தீர்த்திட வேண்டும் என்ற நல்ல நோக்கில் வாரத்திற்கு ஒரு நாள் மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களின் முன்னிலையில் மாவட்டத்தில் உள்ள பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தருகின்ற கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, துறை வாரியாக பிரித்து அம் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில் இன்று (24.09.2024) மனுக்கள் பெறப்படுகின்றது. 

இதற்கென்று தனியாக சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு, வழங்கப்பட்ட மனுக்களை முறைப்படுத்தி அதனை முறையே கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும். இம்மனுக்கள் மீது வாரம்தோறும் ஆய்வு மேற்கொண்டு, தீர்க்க கூடிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் நிதி ஆதாரத்துடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று விரைந்து முடிக்கப்பட்டு வருகிறது. 

இன்று நடைபெற்ற மனுக்கள் பெறும் நிகழ்வில், பெறப்பட்ட  சுமார் 150  மனுக்களில் முக்கியமாக சாலை வசதிகள், இடுக்காடுகளுக்கு சரியான அடிப்படை வசதிகள், வீட்டுமனை பட்டாக்கள் மேலும் கொடுக்கப்பட்டுள்ள பட்டாக்களை அடங்கலில் பதிய வேண்டும். குடிநீர் வசதிகள், வடிகால் கால்வாய்கள் தூர் வாரப்பட்டு சரி செய்ய வேண்டும்,  மின் கம்பங்களை மாற்றப்பட வேண்டும்,  சில பகுதிகளில் மின்சாரம் குறைந்த மின் அழுத்த திறன் கொண்டு இருக்கிறது அதனை சரி செய்யப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் இன்று பெறப்பட்டுள்ளது.

நமக்கு தெரியாத சில பிரச்சனைகள் மற்றும் மக்களின் தேவைகளை  இன்று மனுக்களாக வழங்கப்பட்டுள்ளது. அம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, தேவை ஏற்படும் மனுக்களுக்கு அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அரசு அலுவலர்களை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கூட்டுறவு துறை சார்பில், 3 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.47,16,000/- மதிப்பிலான வங்கி கடனுதவிகளும், 5 பயனாளிகளுக்கு ரூ.3,70,118/- மதிப்பீட்டில் பயிர் கடனுதவிகளும், 3 பயனாளிகளுக்கு ரூ.1,62,000/- மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு கடனுதவிகள்  என மொத்தம் 50 பயனாளிகளுக்கு ரூ. 52.48 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, பள்ளிக்கல்வித் துறை சார்பில், தமிழ்வழியில் பயின்று கல்வி மற்றும் தனித்திறன்களில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு காமராஜர் விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 2022-2023 ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட பத்தாம் வகுப்பில் மாவட்டத்தில் சிறப்பு நிலை பெற்ற 15 மாணவர்களுக்கு தலா ரூ.10,000/-மும், 12-ம் வகுப்பில் சிறப்பு நிலை  பெற்ற 15 மாணவர்களுக்கு தலா ரூ.20,000/-மும். சிறந்த செயல்பாட்டிற்காக ஏகனாம்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1,00,000/-, ஏனாத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.75,000/-மும் பரிசும் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள். 

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி.எம்.மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி. க.ஆர்த்தி, முதன்மை கல்வி அலுவலர் திருமதி.வெ.வெற்றிச்செல்வி, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


No comments

Thank you for your comments