இயற்கையோடு இணைந்து வாழ்ந்தவர்கள் தமிழர்கள் - காஞ்சிபுரம் முதன்மை நீதிபதி பேச்சு
காஞ்சிபுரம், செப்.24:
காஞ்சிபுரம் பச்சையப்பன் அரசு மகளிர் கல்லூரி கலையரங்கில் தொல்லியல் பயிலரங்கம்,தொல்பொருட்கள் மற்றும் நாணயங்கள் கண்காட்சி, இலக்கிய மன்ற தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) புவனேசுவரி தலைமை வகித்தார்.தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்கள் மு.நஜ்மா,தே.வேல்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உதவிப் பேராசிரியை மா.பா.செ.ராணி வரவேற்றார்.
விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி ப.உ.செம்மல் கலந்து கொண்டு தொல் பொருட்கள் கண்காட்சியை திறந்து வைத்து பேசியதாவது:-
கடிகாரங்கள் இல்லாத காலங்களில் பறவைகள் சத்தமிடும் நேரங்களையும், பூக்கள் பூக்கும் நேரங்களையும் வைத்து நேரத்தை கணக்கிட்டிருக்கிறார்கள் தமிழர்கள். 5 வகையான நிலங்களில் குறிஞ்சி,முல்லை, மருதம், நெய்தல் ஆகிய 4 வகை நிலங்களிலும் தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள், சுருக்கமாக சொன்னால் இயற்கையோடு இணைந்து தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
பல கலைகளையும் கற்றுத் தரும் இடமாகவும், காளிதாசர் எழுதிய பல வட மொழி இலக்கியங்களிலும் காஞ்சிபுரத்தின் பெருமை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அதிகமாக படித்தவர்கள் தான் தலைவர்களாக உயர்ந்திருக்கிறார்கள்.புத்தக வாசிப்பு பழக்கம் ஒரு மனிதரை உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்லும். முன்னாள் முதலமைச்சர்களாக இருந்த அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் நல்ல படிப்பாளிகளாகவும், படைப்பாளிகளாகவும் இருந்திருக்கிறார்கள் என்று பேசினார்.
அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கர்,தொல்லியல் ஆய்வாளர் ரா.சு.ஜவஹர்பாபு ஆகியோர் தொல்லியல் ஆய்வுகள் குறித்து பேசினார்கள்.
விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவியர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments