செய்தியாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனை திட்டம் நிறைவேற்றாத அவலம்! -Dr கா.குமாரின் என் குரல்
செய்தியாளர்கள் நம் நாட்டின் ஜனநாயகத்தின் குரலாக செயல்பட்டு, மக்களின் தேவைகள், பிரச்சினைகள் மற்றும் அரசின் நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டு காட்டுகின்றனர். இதனால், அவர்கள் நலன்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது அரசின் கடமையாக கருதி அரசும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. செய்தியளார்களின் நலதிட்டங்களில் ஒன்று வீட்டுமனை வழங்குவதாகும்
கலைஞர் வழங்கிய திட்டம்
பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் பணிபுரியும் செய்திதுறையினருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்ற திட்டத்தை முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் கொண்டுவந்தார். அதன் அடிப்படையில், முதன்முதலில் மதுரையில் உள்ள பத்திரிக்கையாளர்களுக்கு மாட்டுத்தாவணி அருகிலையே இடம் ஒதுக்கி வீட்டுமனை பட்டாவையும் வழங்கினார். அதைத் தொடர்ந்து திமுக ஆட்சியில் பல மாவட்டங்களில் உள்ள பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனை வழங்கப்பட்டது.
இதையடுத்து, பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டம் கிடப்பிலேயே இருந்தது. செய்திதுறையினரும் இதற்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலையொட்டி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழக மக்களுக்கு பல்வேறு சலுகைகளையும் திட்டங்களையும் அறிவித்திருக்கிறார். அதுபோல், பத்திரிகையாளர்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்று கூறினார். அதைத் தொடர்ந்து சேலம் உட்பட ஒரு சில மாவட்டங்களில் உள்ள பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனை பட்டா கொடுக்கப்பட்டும் இருக்கிறது.
ஆனால், இன்றும் பல மாவட்டங்களில் செய்தியாளர்களுக்கான வீட்டுமனை திட்டம் நிறைவேற்றப்படாமல் இருப்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது.
குறிப்பாக வேலூர் மாவட்டத்தில், முன்னாள் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் செய்தியாளர்களுக்கு விரைந்து மனைப்பட்டாக்களை வழங்க தன்னால் ஆன முயற்சிகளை எடுத்தார். முடியும் தருவாயில் சட்டமன்ற தேர்தல் நடப்பது குறித்து அறிவிப்பு வெளியானது. அத்துடன் அந்த பணி நிறுத்தப்பட்டது. தேர்தல் முடிந்ததும் மீண்டும் அந்த பணிகள் தொடங்கியது. இதற்கான பூர்வாங்க பணிகள் மெல்ல மெல்ல முடிந்து கொண்டு வந்தது. செய்தியாளர்களின் சரிபார்ப்பு மற்றும் பயனாளர்கள் பெயர் பட்டியல் இறுதி பணியும் நிறைவடைந்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்த சண்முகசுந்தரம் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் அந்த பணி கிடப்பில் போடப்பட்டது. இதேபோன்று பல்வேறு காரணங்களால் பிற மாவட்டங்களிலும் இத்திட்டம் கிடப்பில் உள்ளது வருந்ததக்கது.
பாதுகாப்பு
இந்த வீட்டு மனை திட்டம் மூலம் செய்தியாளர்கள் தங்கள் குடும்பத்துடன் பாதுகாப்பான மற்றும் நிலையான வீட்டை அமைத்துக் கொள்ள வழிவகுக்க வேண்டும். அதேசமயம், கடந்த மூன்று ஆண்டுகளாக பல மாவட்டங்களில் இதற்கான செயல்பாடுகள் தாமதம் அடைந்துள்ளன. இதற்கு காரணமாக, அடையாளங்காணும் நிலம் குறைபாடுகள், நிர்வாக தாமதங்கள், உரிய அதிகாரிகளின் கவனக்குறை ஆகியவை கூறப்படுகிறது. இதனால், திட்டம் தொடர்பான பல விண்ணப்பங்கள் கிடப்பில் உள்ளன.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு இந்த விஷயம் கொண்டு செல்லப்பட வேண்டியது அவசியமாகிறது. இத்திட்டத்தின் செயலாக்கம் என்பது அதிரடியான முறையில் நடைபெற வேண்டும்
முதலமைச்சர் சிறப்பு கவனம்
கலைஞர் அவர்கள் தொடங்கிய இந்த திட்டத்தை, அவருடைய நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி செய்திதுறையினர் அனைவருக்கும் இந்த திட்டம் பாரபட்சமின்றி சென்றடைய வேண்டும். இதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சிறப்பு கவனம் செலுத்தி இந்த திட்டத்தை விடுபட்ட மாவட்டங்களில் நிறைவேற்ற உத்திரவிடவேண்டும்.
இவ்வாறு செய்தியாளர்களின் நலனை உறுதி செய்வது மட்டுமல்லாமல், அவர்கள் சமூகத்தில் மேலோங்கிப் பணியாற்ற தகுந்த அடித்தளத்தை அமைக்கவும் வழிவகுக்கும்.
மக்களின் குரலாக செயல்படும் செய்தியாளர்களின் நல்வாழ்வு குறித்த தீவிரமான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள் அவர்கள் மேற்கொண்டு, அவர்களின் மனநிறைவை பெறக்கூடிய வகையில் பரிசீலித்து இந்த திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்.
No comments
Thank you for your comments