அரசு தலைமை மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்த எம்எல்ஏ சிவிஎம்பி எழிலரசன்.
காஞ்சிபுரம் :
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அதிரடியாய் நுழைந்து ஆய்வு மேற்கொண்ட காஞ்சிபுரம் எம்எல்ஏ சிவிஎம்பி எழிலரசன்.
படுக்கை வசதி இல்லாமல் பச்சிளம் குழந்தைகளோடு தரையில் படுத்து கிடந்த பிரசவித்த தாய்மார்களை பார்த்து அதிர்ச்சி.
உடனடியாக படுக்கை வசதி ஏற்படுத்தித் தர மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவு.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இங்கு அவசர ரசிகிச்சை, பொது மருத்துவம், குழந்தைகள் பிரிவு, எலும்பு மருத்துவம், கண் மருத்துவம், சிறுநீரக மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவர் சிகிச்சை பிரிவுகளுடன் 700க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
நாள்தோறும் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 3000 திற்கும் மேற்பட்ட நோயாளிகள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்த நிலையில் மகப்பேறு நல மருத்துவ பிரிவு ஐந்து மாடிகள் கொண்ட கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.
முதல் தளத்தில் கர்ப்பிணிப் பெண்கள் சிகிச்சை பிரிவு இரண்டாவது தளத்தில் பெண்கள் அறுவை சிகிச்சை மற்றும் விபத்து பிரிவு மூன்றாவது தரத்தில் கர்ப்பிணி பெண்கள் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை பகுதி நான்காவது தரத்தில் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பகுதி ஐந்தாவது தளத்தில் பிரசவத்திற்கு பின்னர் பெண்கள் பராமரிப்பு பகுதி ஆகியவை செயல்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு மேற்பட்ட பிரசவங்களும் ஐந்து தளங்களிலும் 250 க்கும் மேற்பட்ட தாய்மார்கள் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மகப்பேறு மருத்துவ பிரிவில் போதிய அளவில் படுக்கை வசதி இல்லாமல் பிரசவித்த தாய்மார்கள் பச்சிளம் குழந்தைகளோடு தரையில் படுத்து கிடப்பதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ சிவிஎம்பி எழிலரசன், அரசு மருத்துவமனை அதிகாரிகள் யாரும் எதிர்பார்க்காத நிலையில் திடீரென அதிரடியாக அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவ பிரிவில் நுழைந்து ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்விற்கு வரும்பொழுது மருத்துவப் பிரிவு வாசலில் பிரசவத்திற்கு வந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் கேட்பாரற்று படுத்து கிடந்த நிலையில் உடனடியாக பணியில் இருந்த மருத்துவரையும் செவிலியர்களையும் அதிரடியாக அழைத்து படுத்துக்கிடந்த பெண்மணியை அழைத்துச் சென்று பிரசவம் பார்க்க வைத்தார்.
பின்னர் ஒவ்வொரு பிரிவாக பார்வையிட்டு சென்ற நிலையில் ஐந்தாவது மாடியில் பிரசவித்த தாய்மார்கள் பச்சிளம் குழந்தைகளோடு படுக்கை வசதி இல்லாமல் தரையில் படுத்து கிடப்பதை கண்டறிந்து, மருத்துவமனை அதிகாரிகளை அழைத்து உடனடியாக படுக்கை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது மாடியில் செயல்பட்டு வந்த சிகிச்சை பிரிவில் காலியாக இருந்த படுக்கை வசதிகளை மருத்துவமனை ஊழியர்கள் சுத்தம் செய்து தரையில் படுத்து கிடந்த தாய்மார்களுக்கு ஒதுக்கீடு செய்து வழங்கினார்கள்.
பிரசவம் நடந்து பல நாட்களாக தரையில் படுத்து கிடந்த தாய்மார்கள் படுக்கை வசதி செய்து கொடுத்த எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மருத்துவ பணிகள் இணை இயக்குனர், மருத்துவமனை கண்காணிப்பு அலுவலர் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் ஆகியோர் பேசிய எம்எல்ஏ எழிலரசன் மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.
மருத்துவமனையின் தேவைகள் குறித்து கேட்டறிந்ததோடு,புதிய கட்டிட வசதிகளை ஏற்படுத்தி தர முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப் போவதாக உறுதி அளித்தார்.
மருத்துவமனை வளாகத்தில் குடிநீர் பிரச்சனை உள்ளதாகவும், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் பழுது அடைந்த நிலையில் உள்ளது குறித்து பொதுமக்கள் எம்எல்ஏவிடம் புகார் தெரிவித்த நிலையில் உடனடியாக சரி செய்து தர மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை நிர்வாகத்திற்கும் எம்எல்ஏ உத்தரவிட்டார்.
அரசு மருத்துவமனையில் அதிரடியாக நுழைந்து காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் ஆய்வு செய்த சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments
Thank you for your comments