சாலை விபத்தில் கணவர் உயிரிழந்த விவகாரத்தில் சந்தேகம் - கலெக்டரிடம் மனைவி புகார்.
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா ஓடந்தாங்கல் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன், இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும் ஒன்றரை வயதில் பெண் குழந்தையும் உள்ளது.
முருகன் திருவண்ணாமலை மாவட்டம் மாங்கால் சிப்காட்ழ் பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் முருகனுக்கும் பங்காளி உறவினர்களுக்கும் சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக முருகனின் உறவினர்கள் பலமுறை கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
மேலும் முருகன் மாங்கால் தனியார் தொழிற்சாலையில் பணி செய்து கொண்டிருந்தபோது பங்காளி விஜயன் என்பவர் அடியாட்களுடன் சென்று முருகனை தாக்கிய சம்பவமும் நடைபெற்று உள்ளது.
இதுகுறித்து முருகன் காவல் நிலையத்திலும் புகார் அளித்து, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி பாதுகாப்பு தருமாறு மனு அளித்து உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 26 ஆம் தேதி முருகன் மாங்கால் தொழிற் பேட்டைக்கு வேலைக்குச் சென்று விட்டு திரும்பி வந்த நிலையில் உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப்பாக்கம் பகுதியில் உள்ள சாலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் கிடந்து உள்ளார்.
இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில் உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று படுகாயம் அடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முருகனை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செங்கல்பட்டு மருத்துவமனையில் முருகனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்த விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து உத்திரமேரூர் போலீசார் சாலை விபத்தாக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு முருகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் முருகனின் மனைவியான பாக்கியலட்சுமி தனது கணவர் சாலை விபத்தில் உயிரிழந்ததாக கூறுவதில் சந்தேகம் இருப்பதாகவும்,தங்களின் பங்காளிகளான விஜயன், பாஸ்கரன், முருகன்,சரளா, ரேவதி, எல்லம்மாள், ஆகியோர் குடும்பத்தினர் திட்டமிட்டு கூலிப்படையை வைத்து கொலை செய்து இருக்கலாம் என உத்திரமேரூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து உள்ளார்.
மேலும் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் வரை கணவரின் உடலையும் வாங்க மாட்டோம் என தெரிவித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து பாக்கியலட்சுமி தனது கைக்குழந்தை மற்றும் உறவினர்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் சந்தித்து தனது கணவர் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கூறி கோரிக்கை மனு அளித்தார்.
No comments
Thank you for your comments