Breaking News

வாழ்க்கையில் உயர்வு என்பது படித்தால் மட்டுமே வரும் - "உயர்வுக்கு படி" நிகழ்ச்சியில் ஆட்சியர் பேச்சு

 வேலூர் : 

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 2023-24 கல்வியாண்டில் கல்லூரியில் சேர  விண்ணப்பிக்காத 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்,  தேர்வு எழுதாத இடைநின்ற மற்றும் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு தகுந்த உயர்கல்வி ஆலோசனை வழங்கி திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் "உயர்வுக்கு படி"  நிகழ்ச்சியை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்  வே.இரா. சுப்புலெட்சுமி இன்று (11.09.2024)  குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர்  மேல்நிலைப் பள்ளியில் குத்துவிளக்கேற்றி  தொடங்கி வைத்தார். 


தமிழக முதல்வரின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி என்ற நிகழ்ச்சி மூலம் 12 ஆம் வகுப்பு தோல்வியுற்ற அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் உயர்வுக்கு படி சிறப்பு முகாம் வேலூர் மாவட்டத்தில் இன்று 11.09.2024  மற்றும் 14.09.2024 அன்று  நடைபெற உள்ளது. 

2022-23 மற்றும் 2023-24ஆம் கல்வியாண்டில் கல்லூரிக்கு விண்ணப்பிக்காத +2 தேர்வு எழுதிய, எழுதாத இடைநின்ற மற்றும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற, பெறாத மாணவர்களுக்கு தகுந்த உயர்கல்வி ஆலோசனை வழங்கி உயர்கல்வி அல்லது திறன் மேம்பாட்டு பயிற்சியில் 100% சேர்கையை உறுதி செய்யும் பொருட்டு உயர்வுக்கு படி என்ற நிகழ்ச்சி இன்று  குடியாத்தம் கோட்டத்தில் நடைபெற்றது.

இன்று நடைபெற்ற முகாமில் குடியாத்தம், பேர்ணாம்பட்டு மற்றும் கீ.வ. குப்பம் ஆகிய வட்டாரங்களில் உள்ள உயர்கல்வி சேராத மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு  உயர்கல்வி சேர ஏதுவாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை கலைக்கல்லூரிகள், துணை மருத்துவ படிப்பு சார்ந்த கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் (ITI), பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் முகாமில் பங்கேற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முகாமில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள்  தாங்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் விருப்ப பாடங்களை  பயிலுவதற்கான கல்லூரியை தேர்வு செய்தனர். மாணவ, மாணவிகளுக்கு கல்லூரியில் சேர்க்கைக்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர்  வே.இரா. சுப்புலெட்சுமி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்தாவது, 

இந்த உயர்வுக்கு படி என்ற நிகழ்ச்சி அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் சேரவில்லை என்றால் அதை மாநில முழுவதும் கண்காணித்து,  அந்த மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து படிப்பை தொடராமைக்கான காரணம் என்ன என்று ஆய்வு செய்து, அவர்களை ஒரு கலை கல்லூரியிலோ, பாலிடெக்னிக் கல்லூரியிலோ  மற்றும் தொழிற்பயிற்சி நிலையத்திலோ சேர்த்து அவர்களின் படிப்பினை தொடர வைப்பது ஆகும்.

வாழ்க்கையில் உயர்வு என்பது படித்தால் மட்டுமே வரும் என்ற உயர்வான நோக்கத்துடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு முயற்சி தான் இந்த உயர்வுக்கு படி என்ற திட்டம்.

இத்திட்டத்தின்கீழ் நம்முடைய மாவட்டத்தில் சென்ற மாதம் மட்டும் சுமார் 300 மாணவ, மாணவிகளை கண்டறிந்து அவர்களை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக்  கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்த்து  உயர்க்கல்வி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவ, மாணவிகளின்  உயர்க்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு  மாணவிகளுக்கு  புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் மாதம் ரூ.1000/- அவர்கள் உயர்கல்வி படிப்பு முடியும் வரையும், மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்கீழ் மாதம் ரூ.1000/- அவர்களின் படிப்பு முடியும் வரையும்  வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. 

வேலூர் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் 6000 மாணவிகளும், தமிழ்புதல்வன் திட்டத்தின்கீழ் 4600 மாணவர்களும் என சுமார் 10,000 மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி தொடர உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அனைத்து ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் சென்ற ஆண்டு  12 ஆம் வகுப்பு முடித்து  உயர்கல்வியில் சேரமால் உள்ள மாணவ, மாணவிகளை  கண்டறிந்து அவர்களை இம்முகாமிற்கு அழைத்து வந்து கல்லூரியில் சேர்க்கைகான முயற்சிகளை  செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  வே.இரா. சுப்புலெட்சுமி  தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர்   அமுலு விஜயன், குடியாத்தம் நகர்மன்ற தலைவர் சௌந்தரராஜன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர்  சீதா, குடியாத்தம் வட்டாட்சியர்  சித்ரா தேவி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு. பானுமதி, குடியாத்தம் நகராட்சி ஆணையர்  மங்கையர்க்கரசன், மாவட்ட கல்வி அலுவலர் ஆர். மோகன், பள்ளி தலைமையாசிரியர்  கோ.அகிலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments