Breaking News

சூட்கேசில் துண்டுத் துண்டாக பெண்ணின் உடல்.. ஒருவர் கைது! - குற்றவாளியைக் காட்டிக்கொடுத்த சிசிடிவி

சென்னை : 

சென்னை, துரைப்பாக்கம் பகுதியில் கட்டுமானப் பணிகள் நடந்து வந்த இடத்தில் இருந்த சூட்கேசில் ஒரு பெண்ணின் உடல் துண்டுத் துண்டாக வெட்டி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சம்பவம் நடந்து ஒரு சில மணி நேரங்களிலேயே பலியான பெண்ணின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு, குற்றவாளி என சந்தேகிக்கப் படும் நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தில் பெண்ணின் உடலை துண்டுத் துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து வீசிய சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, கொலை நடந்த ஒரு சில மணி நேரத்திலேயே கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை துரைப்பாக்கம், குமரன் குடில் பிரதான சாலையில், கட்டுமான பணி ஒன்று நடைபெற்று வருகிறது. இன்று காலை அந்த கட்டுமான பணிக்கு வந்த மாரி என்பவர் அங்கு சூட்கேஸ் ஒன்று இருப்பதை கண்டுள்ளார்.

மேலும் அங்கு பணிக்கு இடைஞ்சலாக இருந்த சூட்கேசை அங்கு இருந்து தள்ளியுள்ளார். அப்போது அந்த சூட்கேசில் இருந்து ரத்தம் வடிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அவ்வழியாக சென்ற துரைப்பாக்கம் காவலருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அப்போது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சூட்கேசை திறந்து பார்த்த போது ஒரு பெண்ணை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து சூட்கேஸில் அடைத்து வைத்து அங்கு வீசி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த சென்னை இணை ஆணையர் சி.பி. சக்கரவர்த்தி, அடையாறு துணை ஆணையர் பொன்கார்த்திக்குமார், காவல்துறையினர் சூட்கேசை திறந்து பார்த்து கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட உடல் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து பெண்ணின் உடல் பாகங்களை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்த சென்னை மணலியை சேர்ந்த தீபா (32), என்பதும் திருமணம் ஆகாமல் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததும் இடைத்தரகர் மூலமாக பாலியல் தொழிலில் ஈடுபட இங்கு வந்ததும் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து சம்பவ இடத்தில் இந்த பெண்ணை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் எடுத்து வந்து இங்கு வைத்தது யார் என அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அந்த சூட்கேசை அதேப் பகுதியில் தங்கியிருந்த ஒரு நபர் வந்து போட்டு விட்டுச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் ஒரு வீட்டில் தங்கியிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், வயது 25 என்பதும் தெரியவந்தது.

மேலும் அவரிடம் நடத்திய விசாரனையில் நேற்று இரவு பாலியல் தொழிலில் ஈடுபடும் தீபாவை புரோக்கர் மூலம் வர வைத்ததாகவும் பின்னர் பணம் கொடுப்பதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த மணிகண்டன் தீபாவைக் கொலை செய்தது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, மணிகண்டனை கைது செய்த போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Thank you for your comments