காஞ்சிபுரத்தில் அரசு அலுவலகங்களில் ஆட்சியர் கள ஆய்வு - பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்
காஞ்சிபுரம், செப்.19:

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்படி அரசு அலுவலகங்கள் பலவற்றில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்தார்.காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை பார்வையிட்டு அங்கு பணியில் உள்ள மகளிர் காவலர்களின் தினசரி நடவடிக்கைகள் குறித்து கேட்டுத் தெரிந்து கொண்டார்.
காவலர் வருகைப்பதிவேடு,பொது நாட்குறிப்பு பதிவேடு,தினசரி பதிவேடு ஆகியனவற்றையும் பார்வையிட்டார்.பின்னர் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தைப் பார்வையிட்டு அக்கிடங்கில் பணிபுரிபவர்களிடம் கிடங்கிலுள்ள பொருட்களின் இருப்பு நிலவரங்களை கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் மருந்தகம்,நோயாளிகளின் உறவினர்கள் தங்கும் விடுதி ஆகியனவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து கூட்டுறவு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற உறுப்பினர்கள் சந்திப்பு முகாமிலும் கலந்து கொண்டு 90 பயனாளிகளுக்கு ரூ.67,79,740 மதிப்பிலான வங்கிக் கடனுதவிகளையும் ஆட்சியர் வழங்கினார்.
காஞ்சிபுரம் பூக்கடைச் சத்திரம் பகுதியில் மாவட்ட எஸ்பி கே.சண்முகம், டிஎஸ்பி சங்கர் கணேஷ் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் இணைந்து போக்குவரத்து நெரிசலை குறைப்பது தொடர்பான ஆலோசனைகளையும்,அறிவுரைகளையும் ஆட்சியர் அதிகாரிகளுக்கு வழங்கினார்.
ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.ஆர்த்தி,மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் தலைவர் மலர்க்கொடி ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலரும் உடன் இருந்தனர்.
No comments
Thank you for your comments