மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.520.20 கோடிக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
காஞ்சிபுரம், செப்.10:
காஞ்சிபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாநில ஊரக சுகாதார நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனுதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.விழாவிற்கு ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தார்.
எம்பி க.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர்,எழிலரசன்,மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மகளிர் திட்ட இயக்குநர் பிச்சாண்டி வரவேற்று பேசினார். விழாவில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.46.67 கோடி மதிப்பிலான வங்கிக் கடனுதவிகளை வழங்கி பேசியது..
தமிழ்நாடு மாநில ஊரக,நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களை ஒன்றாக இணைத்து மகளிர்,மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் சுய உதவிக் குழுக்கள் அமைத்தல், அம்மக்களுக்கு ஆதார நிதி வழங்குதல்,வங்கிக்கடன் பெற்றுத் தருதல்,படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு அளித்தல்,உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது.
திமுக அரசு ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளில் 14.60லட்சம் ஏழை எளிய மக்கள் வாங்கிய ரூ.5250 கோடி மதிப்பிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் மட்டும் 58.08 கோடி மதிப்பிலான தங்க நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 18443 ஏழைகள் பயனடைந்துள்ளனர்.
இதே போல காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13515 விவசாயிகளுக்கு ரூ.89.41 கோடி மதிப்பிலான பயிர்க்கடன்களையும் தள்ளுபடி செய்திருக்கிறோம். கடந்த நிதியாண்டில் மட்டும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் வழங்க ரூ.620 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் 620.20 கோடியை 8754 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகடனுதவிகளாக வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் பேசினார்.
விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.ஆர்த்தி,ஒன்றியக் குழுவின் தலைவர் மலர்க்கொடி குமார் உட்பட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்,அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments