காஞ்சிபுரத்தில் சுதந்திர தின விழா - ஆட்சியர் தேசியக் கொடியேற்றி வெண் புறாக்களையும் பறக்க விட்டனர்
காஞ்சிபுரம்,ஆக.15:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து 49 பயனாளிகளுக்கு ரூ.10.47 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கத்தில் சுதந்திர தின விழாவையொட்டி ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தேசியக் கொடியினை ஏற்றினார்.
பின்னர் காவல்துறையினரின் அணிவகுத்து நின்றதை காஞ்சிபுரம் எஸ்பி கே.சண்முகத்துடன் திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் ஊர்க்காவல்படையினரின் அணிவகுத்து வந்து ஆட்சியருக்கு மரியாதை செலுத்தினார்கள்.
ஆட்சியர் கலைச்செல்வி மோகன், எஸ்பி கே.சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ் ஆகிய மூவரும் இணைந்து மூவர்ண பலூன்களையும்,உலக சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெண் புறாக்களையும் பறக்க விட்டனர்.
விழாவில் சுதந்திரப்போராட்ட தியாகிகள் கௌரவிக்கப்பட்டனர். பின்னர் அரசின் பல்வறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு ஆட்சியர் பாரட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.4,80,055 மதிப்பிலான இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும்,வேளாண் வணிகத்துறை சார்பில் ஒருவருக்கு ரூ.ஒரு லட்சத்துக்கான தொழில் முனைவோருக்கான மானியம், முதலைமைச்சரின் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ.1.50லட்சம் மதிப்பில் வைப்புத்தொகை வழங்கியது உட்பட மொத்தம் 49 பயனாளிகளுக்கு ரூ.10.47 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார்.
நிறைவாக பள்ளி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.ஆர்த்தி ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments