Breaking News

நாளை புதிய ராஜாஜி காய்கறி சந்தை கட்டிடம் திறப்பு

காஞ்சிபுரத்தில் கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழாவிற்கு தயாராகி விட்ட, ராஜாஜி காய்கறி சந்தை, உள்புற பணிகள் நிறைவடைந்த நிலையில் காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது . 


காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காஞ்சிபுரம் ரயில்வே சாலை பகுதியில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக ராஜாஜி காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது.

பழமையும் பழுதடைந்த நிலையிலும் சுகாதார சீர்கேடுகளுடன் இருந்த ராஜாஜி காய்கறி சந்தையை புதியதாக கட்டித் தர வேண்டும் என வியாபாரிகள் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் சுமார் ஏழு கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராஜாஜி காய்கறி சந்தை கட்டுமான பணி 2022 ஆண்டு இறுதியில் துவக்கப்பட்டது.

3 ஏக்கர் பரப்பளவில் இருந்த பழமையான ராஜாஜி மார்க்கெட்டில் 320 கடைகள் இருந்தது. இந்த நிலையில் தற்பொழுது கட்டி முடிக்கப்பட்டுள்ள ராஜாஜி காய்கறி சந்தையில் மாநகராட்சி நிர்வாகம் 260 கடைகள் மட்டுமே கட்டியுள்ளது,

புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ராஜாஜி காய்கறி சந்தையில் நாலாப்புறமும் சுற்றி ஷட்டர் கதவு அமைக்கப்பட்ட கடைகளும் நடுவினில் உழவர் சந்தைகளில் உள்ளதை போல திறந்தவெளி கடைகள் போலவும் அமைக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தயாராகி உள்ளது

உள்புறம் கட்டி முடிக்கப்பட்டு தயாராகியுள்ள ராஜாஜி காய்கறி சந்தையை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக ஆக.12ம் தேதி  திங்கட்கிழமை திறந்து வைக்கிறார்,

இதனைத் தொடர்ந்து ராஜாஜி காய்கறி சந்தையின் வெளிப்புற மதில் சுவர்கள் அமைக்கும் பணி நிறைவடைந்த உடன் வியாபாரிகள் கடைகளைத் திறந்து காய்கறி வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்,

ஓராண்டுக்குள் கட்டுமான பணிகள் முடிவடைந்து திறந்து வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுமான பணிகள் நடைபெற்று தற்போது திறப்பு விழா காண தயாராகி உள்ளது ராஜாஜி காய்கறி சந்தை வியாபாரிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments

Thank you for your comments