பேரிடர் காலங்களில் விவசாயிகளுக்கு உடனுக்குடன் நிவாரணங்கள் வழங்குகிறோம் - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேச்சு
காஞ்சிபுரம், ஆக.11-
பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உடனுக்குடன் நிவாரணங்கள் வழங்குகிறோம் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் காஞ்சிபுரத்தில் ஞாயிற்றுக் கிழமை பேசினார்.
காஞ்சிபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கமும், காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் தமிழகம் இலவச பயிற்சி மையமும் இணைந்து சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் விவசாய கண்காட்சியை நடத்தினார்கள்.
முதல் நாள் விவசாய கண்காட்சியை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்விக்குழுமங்களின் தலைவர் கு.ப.செந்தில்குமார் தொடக்கி வைத்து விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல்ரகங்களை வழங்கினார்.
2வது நாள் கண்காட்சி தொடக்க விழாவில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு,தமிழக குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் உட்பட மக்களவை,சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
விவசாய கண்காட்சியை 2 வது நாளாக திறந்து வைத்து பார்வையிட்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளாக விவசாயிகள் பல்வேறு போராட்டங்களையும்,சாலை மறியல்களையும் நடத்தினார்கள்.இந்த போராட்டங்களினால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர்.
ஆனால் திமுக அரசு பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.விவசாயிகள் மட்டுமே பச்சைத் துண்டு அணிந்திருந்த நிலையில் இப்போது பலரும் பச்சைத்துண்டு அணிவதை பெருமையாக நினைக்கிறார்கள்.
அதற்கு காரணம் திமுக அரசு விவசாயிகளுக்கு செய்து வரும் பல்வேறு நலத்திட்டங்கள் என்பதை மறுப்பதற்கில்லை.கரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் எந்த தொழில்களும் செயல்படாத நிலையிலும் விவசாயம் மட்டும் அனைவருக்கும் உணவு கிடைக்கும் வகையில் உற்பத்தி செய்யப்பட்டது.
தமிழக அரசின் சார்பில் தனி பட்ஜெட் வேளாண்மைக்கென சமர்ப்பிக்கப்படுகிறது. அதில் விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு அதற்கேற்ப பட்ஜெட் தயாரிக்கிறோம்.மழை,வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஏற்ப உடனுக்குடன் நிவாரணங்களை வழங்கி வருகிறோம் எனவும் அமைச்சர் பேசினார்.
விழாவில் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகளை வழங்கி அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-
விவசாயப் பணிகளை செய்ய ஆட்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் விவசாயக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் உபகரணங்கள் விவசாயிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.
வேளாண்மைத்துறை சார்பில் தொடர்ந்து 3 இடங்களில் விவசாய கண்காட்சி நடைபெற இருப்பதாகவும் பேசினார்.விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசனும் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகளை வழங்கி பேசினார்.
தொடக்க விழாவிற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டு இயக்க தலைவர் ஆர்.கே.தெய்வசிகாமணி தலைமை வகித்தார். தமிழகம் இலவச பயிற்சி மையத்தின் தலைவர் கே.எழிலன், கிரியேட் நமது நெல்லைக் காப்போம் அமைப்பின் தலைவர் பி.துரைசிங்கம்,மக்கள் நலச்சந்தை ஒருங்கிணைப்பாளர் கு.செந்தமிழ் செல்வன், ஹீலர் பவுண்டேன் அமைப்பின் நிர்வாகி சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் எம்பி.க.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர், எழிலரசன், மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றியக்குழுவின் தலைவர் மலர்க்கொடி குமார் உட்பட விவசாயிகள் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments