Breaking News

காஞ்சிபுரத்தில் அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா

காஞ்சிபுரம், ஆக.15:

காஞ்சிபுரத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் 78 வது சுதந்திர தின விழாவையொட்டி வியாழக்கிழமை சுதந்திர தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.


காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சுதந்திர தின விழாவையொட்டி மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் தேசியக் கொடியேற்றினார். விழாவிற்கு வந்திருந்த வழக்குரைஞர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

வழக்குரைஞர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற வழக்குரைஞர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. விழாவில் நீதிபதிகள் சுஜாதா, அருண் சபாபதி, திருமால்,சதீஷ்குமார், ராஜேஷ்குமார், அரசு வழக்குரைஞர்கள் பா.கார்த்திகேயன், ஏ.கே.ரமேஷ், சத்தியமூர்த்தி உட்பட வழக்குரைஞர்கள் பலரும் விழாவில் கலந்து கொண்டனர்.

சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் திமுக கழக மாணவரணி செயலாளரும், எம்எல்ஏவுமான எழிலரசன் தேசியக்கொடி ஏற்றினார். 

விழாவில் பங்கேற்ற பொதுமக்கள், திமுக பிரமுகர்கள் மற்றும் அவ்வழியாக பேருந்துகளில் பயணித்த பயணியர்கள் உட்பட அனைவருக்கும் இனிப்புகளையும் வழங்கினார். 

மாநகராட்சி அலுவலகத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் தேசியக் கொடியேற்றினார். எம்எல்ஏ எழிலரசன், மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.அனைவருக்கும் இனிப்புகளும் வழங்கப்பட்டன. விழாவில் நகராட்சி பள்ளி அளவில் பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் பரிசுகளையும் வழங்கினார்.

மீனாட்சி மருத்துவக்கல்லூரியில் காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவப் பல்கலை மற்றும் கல்லூரியின் விளையாட்டுத் திடலில் முதல்வர் கே.வி.ராஜசேகர் சுதந்திர தின விழாவிற்கு தலைமை வகித்தார்.பல்கலையின் வேந்தர் கோமதி ராதாகிருஷ்ணன், இணை வேந்தர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பல்கலையின் துணைவேந்தர் நீலகண்டன் வரவேற்றார். ஐஎன்எஸ் ராஜாளி விமானப்படை அதிகாரி லெப்டினன்ட் ஸ்வபனில் பாண்டே கொடியேற்றி வைத்து ராணுவ வீரர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்து பேசினார்.

தேசிய மாணவர் படையின் சார்பில் கல்லூரியின் மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் பங்கேற்ற அணிவகுப்பும் நடைபெற்றது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 

விழாவில் கல்லூரியின் கண்காணிப்பாளர் க.பூபதி,துணை முதல்வர் ஈஸ்வரி,நிலைய மருத்துவர் ராதா ஆகியோர் உட்பட கல்லூரி பேராசிரியர்கள்,மருத்துவ மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். உதவி முதல்வர் ஈஸ்வரி நன்றி கூறினார். 

சங்கரா கல்லூரியில் காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் அதன் செயலாளர் வி.பி.ரிஷிகேஷன் தேசியக் கொடியேற்றினார்.தேசிய மாணவர் படையின் சார்பில் மாணவர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் தலைமை வகித்தார். பேச்சு,கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

No comments

Thank you for your comments