Breaking News

காஞ்சிபுரம் ஒன்றிய வளர்ச்சிப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

காஞ்சிபுரம்,  ஆக.28:

காஞ்சிபுரம் ஒன்றியத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



காஞ்சிபுரம் அருகே திம்மசமுத்திரம் ஊராட்சி பாலாஜி நகரில் ரூ.9.21லட்சம் மதிப்பில் போடப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலை,அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு ஆகியனவற்றை ஆய்வு செய்தார்.

அதே ஊராட்சியில் ரூ.12 லட்சம் மதிப்பில் புதிய குளம் வெட்டும் பணி, திரௌபதி அம்மன் கோயில் குளம், ரூ.9 லட்சம் மதிப்பில் திருப்பதி தெருவில் போடப்பட்டுள்ள சிமிண்ட் சாலை, ரூ.9.90 லட்சம் மதிப்பில் செட்டி குட்டை தெருவில் போடப்பட்டு வரும் சாலை ஆகியனவற்றையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் அருகே ஆரியபெரும்பாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை பார்வையிட்டு அங்கு பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை கேட்டறிந்தார். மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கினார்.

பின்னர் அப்பள்ளியில் சமைக்கப்படும் உணவின் தரத்தினை ஆய்வு செய்தார். முன்னதாக காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவுப் பூங்காவினை ஆட்சியர் பார்வையிட்டு பூங்காவின் பராமரிப்பு பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதையும் அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். 

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.ஆர்த்தி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பலரும் உடன் இருந்தனர்.

No comments

Thank you for your comments