Breaking News

மினி லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் மருந்து விற்பனையாளர் பலி - வாகனங்களை சிறைப்பிடித்து போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு 👀

 



காஞ்சிபுரம்  :

 👀

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் பகுதியில் கனகவல்லி பார்மஸில் எனற தனியார் மருந்தக மொத்த விற்பனையகம் இயங்கி வருகிறது. இந்த விற்பனையகத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்களிலுள்ள மருந்தகங்களுக்கு மருந்துப் பொருட்கள் விற்பனைச் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த விற்பனையக நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சரவணன் (வயது 48) என்பவர் இன்று வழக்கம் போல் விற்பனையகத்திலிருந்து மருந்துப் பொருட்களை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, பல்வேறு கிராமப்புற மருந்துக்கடைகளில் கொடுப்பதற்காக காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். 

அப்போது களக்காட்டூர் அருகே  காஞ்சிபுரம்-உத்திரமேரூர் சாலையில் அவரது இருசக்கர வாகனத்தின் எதிரே,எம்.சாண்ட் ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த மினி லாரி ஒன்று, சாலையில் இருந்த ஓர் பள்ளத்தில் ஏறி இறங்கியது. 

அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த மினி லாரியானது சரவணன் ஓட்டி வந்த  இருசக்கர வாகனத்தின் மீது கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதி நிற்காமல் சாலையோர வயல்வெளியில் இறங்கி விபத்துக்குள்ளானது.  

இவ்விபத்தில் படுகாயமடைந்து சரவணன் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இதனைக் கண்டு அவ்வழியே வந்த வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் கொந்தளிப்புடன் அவ்வழியே வந்த கனரக லாரிகளை சிறைப்பிடித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த மாகறல் போலீசாரிடம்,கனரக லாரிகள் அதிகம் செல்லுவதால் தான் இதுபோன்ற விபத்துகளும், உயிர் பலிகளும் ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது என கூறி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் இதன் காரணமாக காஞ்சிபுரம்-உத்திரமேரூர் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு சுமார் அரை கிலோ மீட்டருக்கு மேல் வாகனங்கள் சுமார் 20நிமிடங்களுக்கு மேலாக ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நின்றது.

இதனையடுத்து இப்பகுதிகளில் சாலைகளை சீரமைத்து வேகத்தடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தன் பேரில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அப்பகுதியில் இருந்து கலைந்து சென்றனர்.இதனையடுத்து போலீசார் போக்குவரத்து பாதிப்பினை சீர் செய்தனர்.

மேலும் இவ்விபத்து குறித்து மாகறல் போலீசார் வழக்கு பதிவு செய்து,சாலை விபத்தில் உயிரிழந்த சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து,விபத்து ஏற்படுத்திய மினி லாரியை பறிமுதல் செய்தும்,தப்பி ஓடிய மினி லாரியின் ஓட்டுநர் குறித்து விசாரணை மேற்கொண்டு அவரை வலைவீசி தீவிரமாக தேடி வருகின்றனர்.

உயிர் காக்கும் ஹெல்மெட் அணிந்து இருந்த போதிலும் எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் தனியார் மருந்தக மொத்த விற்பனையக நிறுவனத்தில் பணிபுரிபவர் பலியான சம்பவம் சக பணியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Also Read 🔥  ஆகஸ்ட் 8:  பல விதமான துன்பங்கள் நீங்கும்  நாக சதுர்த்தி, கருட பஞ்சமி ...    வழிபாட்டு முறை மற்றும் நேரம்

No comments

Thank you for your comments