விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகளால் ஏழை மக்களின் மீது வரி உயர்வு சுமத்தல்! - Dr கா.குமாரின் என் குரல்
வேலூர் :
விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகள் காரணமாக, ஏழை மக்களின் மீது வரி உயர்வு சுமத்தப்பட்டுள்ளது என்பதே நிதர்சனமான உண்மை..
தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் கட்டிட விதிமீறல்கள் மற்றும் வரி கணக்கீட்டில் முறைகேடுகள் அதிகமாக நடைபெறும் சூழலில், அதன் பாதிப்பு பல்வேறு மட்டங்களில் மக்களின் மேல் விழுகிறது. குறிப்பாக, இந்த விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகள் காரணமாக, ஏழை மக்களின் மீது வரி உயர்வு சுமத்தப்படுவது பொதுவாகக் காணப்படுகிறது.
கட்டிட விதிமீறல்கள்
நகர்ப்புறங்களில் வளர்ச்சி வேகமாக நடைபெறுகிறது. இந்த வளர்ச்சியின் போது, கட்டிட உள்கட்டமைப்பு விதிமுறைகளை பின்பற்றாமல், விதிமீறலாக வணிக கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பல வணிக கட்டிடங்களில் போதுமான “பார்க்கிங்”, பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் கட்டப்படுவது அதிகரித்து வருகிறது.
இதனால் பல்வேறு பிரச்சினைகள் உருவாகின்றன. முதலாவது, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும்; சாலைகளின் அகலம் குறையும், தண்ணீர் வடிகால் பாதைகள் அடைக்கப்படும், மற்றும் பருவம மழை காலங்களில் நீர்நிலைகள் நிரம்பி வழிவது போன்ற சிக்கல்கள் உருவாகும்.
மேலும், இந்த கட்டிட விதிமீறல்கள் காரணமாக, அரசு அதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்கும்போது, பல்வேறு செலவுகள் ஏற்படுகின்றன.
வரி கணக்கீட்டில் முறைகேடுகள்
வரி கணக்கீட்டில் முறைகேடுகள் நடப்பது மற்றொரு மிகப்பெரிய பிரச்சினையாகும்.
அனுமதியற்ற வணிக கட்டிடங்கள், வீடு என அனுமதி பெற்று வணிக கட்டிடங்களாக செயல்படுதல், தரை தளம் மட்டும் அனுமதி பெற்று, மூன்று தளம், நான்கு தளம் என வணிக கட்டிடங்கள் கட்டுவதால் கட்டிட அனுமதி கட்டணம் ஏய்ப்பால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
அதோடு மட்டுமின்றி தரை தளத்திற்கு மட்டுமே ஆண்டுதோறும் கட்டிட சொத்து வரி செலுத்துவதால் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. ஒவ்வொரு கட்டிடத்தில் கட்டிட சொத்துவரி லட்சக்கணக்கில் வரி ஏய்ப்பு நடக்கிறது.
இதனை ஆய்வு செய்யவேண்டிய அலுவலர்கள், தங்களது ஆதாயத்தை பெற்றுக்கொண்டு அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்துக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களா தொடர்ந்து நீடித்துவருகிறது. மேலும், தங்கும் விடுதிகளில் வசூலிக்க வேண்டிய கழிவுகள் கட்டணம் என பலவற்றிலும் முறைகேடுகளும் விதிமீறல்களும் உள்ளன.
நிதி பற்றாக்குறை
வரி ஏய்ப்பால் நிதி பற்றாக்குறை ஏற்பட்டு மாநகராட்சி வளர்ச்சி தடைபடுகிறது. வருவாய் இழப்புக்கு சில மாநகராட்சி அலுவலர்களும் முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதனால், அரசு செலவுகள் அதிகரித்து, இச்சுமை மக்கள் மேல் செலுத்தப்படுகிறது.
ஏழை மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு
இந்த முறைகேடுகள் மற்றும் விதிமீறல்களின் முடிவில், அடிப்படை வசதிகளுக்கு கூட திணறியிருக்கும் ஏழை மக்களின் மீது வரி உயர்வு சுமத்தப்படுகிறது. இதன் காரணமாக, அவர்களின் வாழ்க்கைத் தரம் மேலும் குறையக்கூடும், மற்றும் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கடினங்கள் ஏற்படலாம்.
அரசின் பொறுப்பு
அரசு, இந்த விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகளை கட்டுப்படுத்த, நிர்வாகத்தின் சீர்மையை மேம்படுத்த வேண்டும். கட்டிட விதிமுறைகளை சரியாக பின்பற்ற வலியுறுத்த, மேலும் கணக்கீட்டு முறைகளில் உள்ள முறைகேடுகளை களைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அப்பாவி ஏழை மக்களை பாதிக்கும் விதத்தில் வரி உயர்வு சுமத்தப்படுவது, சமுதாயத்தின் பொருளாதார சமத்துவத்தை கேள்விக்குள்ளாக்கும். எனவே, அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்து, இந்த பிரச்சினைகளை சீரமைக்க வேண்டும், மேலும் அனைவருக்கும் சம உரிமை வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments
Thank you for your comments