நில மோசடியில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்புக் காவலில் அடைப்பு
பூந்தமல்லி , ஆக, 7 -
நில மோசடியில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டார்.
அம்பத்தூர், கிழக்கு பானு நகர், 5-ஆவது தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 47). இவர் நிலத்தரகராக வேலை செய்து வந்தார்.
இவர் அம்பத்தூர், கிழக்கு ஸ்ரீ பாலாஜி நகர் பகுதியில் உள்ள இப்ராஹிம் என்பவருக்கு சொந்தமான 2,420 சதுரடி நிலத்தை சிலருடன் சேர்ந்து போலி ஆவணம் தயார் செய்து நிலத்தை விற்பனை செய்தார்.
இதே போல அம்பத்தூர், ஞானமூர்த்தி நகர் பகுதியில் ஷீலா அப்பாவு என்பவருக்கு சொந்தமான 2,790 சதுரடி கொண்ட நிலத்தை சிலருடன் சேர்ந்து விஜயகுமார் ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்துள்ளார்.
இந்த 2 நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.1.55 கோடி என தெரிகிறது. இந்த நில மோசடி குறித்து இப்ராஹிம் என்பவரும் , ஷீலா அப்பாவு என்பவரும் ஆவடி காவல் ஆணையர் கி.சங்கரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து கடந்த மாதம் நிலத்தரகர் விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நிலத்தரகர் விஜயகுமார் தொடர்ந்து 2 நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டதால் , அவரை குண்டர் தடுப்புக் காவலில் அடைக்க ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் உத்திர விட்டார்.அதன்பேரில் நிலத்தரகர் விஜயகுமார் குண்டர் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டார்.
No comments
Thank you for your comments