காஞ்சிபுரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் 9 பேர் வயிற்றுப் போக்கால் அவதி - பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் அதிகாரிகள் விபரம் சேகரிப்பு
காஞ்சிபுரம், ஆக.3:
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குட்டைமேடு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை அருந்திய 9 பேர் வயிற்றுப்போக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் அதற்கான விபரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி 34 வது வார்டு பகுதியில் வள்ளல் பச்சையப்பன் தெருவை ஒட்டியுள்ள குட்டை மேடு பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நிலத்தடியில் புதை குழாய் மூலமாக பாலாற்று குடிநீரானது வீடுகள் மற்றும் தெருக்களில் உள்ள குழாய் இணைப்புகள் மூலமாக குடிநீரை மாநகராட்சி நிர்வாகம் விநியோகம் செய்து வருகிறது.
குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதை அறியாமல் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அதனை அருந்தியதால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 9 பேர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்களில் 7 பேர் வீடு திரும்பி விட்ட நிலையில் அப்பகுதியை சேர்ந்த நிர்மலா மற்றும் சீதா ஆகிய இருவர் மட்டும் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குடிநீரில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும்,மாநகராட்சி அதிகாரிகள் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி சுகாதார அலுவலர் அருள்நம்பி, துப்புரவு ஆய்வாளர் சுகவனம் ஆகியோர் தலைமையிலான குழுவினர் குட்டைமேடு பகுதியில் வீடு,வீடாக சென்று பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை சேகரித்தனர்.
முன்னெனச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக மருத்துவ முகாம்கள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.இது குறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி சுகாதார அதிகாரி ஒருவர் கூறுகையில் குடிநீரை நன்றாக காய்ச்சி பருகும்படி ஆட்டோக்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
தடுப்பு மருந்து கலந்த குடிநீர் தற்போது விநியோகம் செய்யப்படுகிறது. நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள பைப்புளை ஆய்வு செய்யவும் சம்பந்தப்பட்ட ஊழியர்களை அறிவுறுத்தி இருக்கிறோம்.
மாற்று ஏற்பாடாக லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கவும், மருத்துவக் குழுவினர் வீடு, வீடாக சென்று தொற்று நோய் எதுவும் உள்ளதா என ஆய்வு செய்யவும், மருத்துவ முகாம்கள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments
Thank you for your comments