செய்தித் துறை சார்பில் "தமிழ்நாடு நாள்” விழா - பல்வேறு போட்டிகளும், கருந்தரங்களுடன் கொண்டாட்டம்
காஞ்சிபுரம் ஏ.கே.ஜி திருமண மாளிகையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் இன்று (18.07.2024) நடைபெற்ற ”தமிழ்நாடு நாள்” விழாவில் மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் ஆகியோர் தமிழன்னை, பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் திருவுருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
மேலும் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மாநில அளவிலான பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் பேசுகையில் தெரிவித்ததாவது:
அதனடிப்படையில் கடந்த 2 ஆண்டுகாலமாக இவ்விழா சென்னையில் நடத்தப்பட்டு, 3 ஆம் ஆண்டாக நம்முடைய காஞ்சியில், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த மண்ணில் நடத்த வேண்டும் என்கின்ற வகையில் மாண்புமிகு முதலமைச்சரின் வழிக்காட்டுதலோடு நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்துள்ள அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.
சென்னை மாகாணம் என்று இருந்த நம்முடைய மாநிலத்தின் பெயரை மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்ட பிறகு, தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்கின்ற அடிப்படையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஏகமனதாக தீர்மானத்தை நிறைவேற்றி, அன்றைக்கு (18.7.1967) அறிவித்தது தான் ஜூலை 18 ஆம் நாள். அது வெளிப்படாமல் இருக்கின்றது என்பதை அறிந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எங்களது துறைக்கு உத்தரவிட்டு இன்றைக்கு தமிழ்வளர்ச்சி துறையும், செய்தித் துறையும் இணைந்து இன்றைய தினத்தை தமிழ்நாடு நாள் விழாவாக மூன்றாம் ஆண்டாக கொண்டாடி வருகிறோம்.
தமிழ்நாட்டிற்கென்று பல்வேறு சிறப்புக்களை நாம் பெற்றிருக்கின்றோம். பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்று தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறுத் திட்டங்களையும், அதே போல், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தினார்கள்.
நாட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்கிற வகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பல்வேறுத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். இன்னும் சொல்லப்போனால், இதே மண்ணில் நம்முடைய மரியாதைக்குரிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மகளிருக்கான மாத உரிமைத் தொகை ரூ.1,000/- என்னும் திட்டத்தை இங்கு தான் தொடங்கி வைத்தார் என்பது நாம் எல்லோரும் அறிவோம்.
இது போல், பல்வேறு திட்டங்கள். அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லா பயணம், அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து கல்லூரிகளுக்குச் செல்லும் உங்களைப் போன்ற மாணவர்களுக்கு, அந்த கல்லூரிகளில் தடையின்றி உயர்கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக மகளிருக்கானப் புதுமைப்பெண் திட்டம், இந்த ஆண்டு முதல் நம்முடைய மாணவர்களுக்கும் வழங்குகின்ற வகையில் தமிழ்ப்புதல்வன் திட்டம் போன்ற எண்ணற்றத் திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகின்றார்.
விவசாயிகளுக்கும், நெசவாளர்களுக்கும், அனைத்து தரப்பு மக்களுக்கும் பல்வேறுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திவருவதால் தான், தமிழ்நாடு மேலும், மேலும் வளர்ச்சி பெற்றுக்கொண்டிருக்கிறது. அந்த வகையில், இந்த விழா நடைபெறுவது பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த மண் ஆகும். பேரறிஞர் அண்ணா அவர்கள் தனது பேச்சால், எழுத்தால் இந்த தமிழ்நாட்டின் சூழலையே மாற்றிக்காட்டியவர் ஆவார். அவர்களின் வழியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், அதே போல், அவர்கள் இருவரையும் சேர்ந்து, ஒரே உருவமாக விளங்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் நல்லாட்சியை நடத்திக்கொண்டிருக்கின்றார்.
அந்த ஆட்சிக்கு நீங்கள் அனைவரும் தொடர்ந்து உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, இங்கு சிறப்பான கருத்தரங்கம் நடக்கவிருக்கிறது. வந்திருக்கும் அனைவரும் முக்கியமாக, மாணவச் செல்வங்கள் இந்த கருத்தரங்கத்தை தெரிவிக்கப்படும் கருத்துகளை கேட்டறிந்து, தெளிவு பெற வேண்டும். நீங்கள் எல்லோரும் தான் தமிழ்நாட்டின் எதிர்காலம்.
இந்நேரத்தில், உங்கள் அனைவரையும் வருக, வருக என்று வரவேற்று, வருகைத் தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி, வாழ்க தமிழ்நாடு என்று மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் ஆகியோர் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு மாநில அளவில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற சென்னை மாவட்டம் கோ.தீபஸ்ரீ என்ற மாணவிக்கு ரூ.50,000/-ம் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழையும், இரண்டாம் பரிசு பெற்ற திருவள்ளூர் மாவட்டம் ம.ஜெயஜனனி என்ற மாணவிக்கு ரூ.30,000/-ம் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழையும், மூன்றாம் பரிசு பெற்ற ஈரோடு மாவட்டம் மு.வீரமணிகண்டன் என்ற மாணவனுக்கு ரூ.20,000/-ம் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழையும், பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற திருவாரூர் மாவட்டம் ச.கௌ.பாவேஷ் பிரசன்னா என்ற மாணவனுக்கு ரூ.50,000/-ம் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழையும், இரண்டாம் பரிசு பெற்ற திருச்சிராப்பள்ளி மாவட்டம் அ.அப்துல் ஹக்கீம் என்ற மாணவனுக்கு ரூ.30,000/-ம் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழையும், மூன்றாம் பரிசு பெற்ற சென்னை மாவட்டம் நா.ரிஸ்வானா பர்வின் என்ற மாணவிக்கு ரூ.20,000/-ம் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார்கள்.
இவ்விழாவினையொட்டி திரு.ஆழி.செந்தில்நாதன் அவர்களின் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கத்தில் “தமிழ்நாடு வாழ்வும் வரலாறும்” என்ற தலைப்பில் முனைவர் பர்வீன் சுல்தானா அவர்களும், “சென்னை மாகாணமும் செயற்கரிய போராட்டங்களும்” என்ற தலைப்பில் செல்வன் சிவ.சதீஷ் அவர்களும், “சென்னை மீட்பும் வரலாறும்” என்ற தலைப்பில் திருமதி. அனு கிரகா அவர்களும், “திராவிட இயக்கத் தலைவர்களும் நவீன தமிழ்நாடும்” என்ற தலைப்பில் திரு. சூர்யா கிருஷ்ணமூர்த்தி அவர்களும், “தமிழ்நாடு பெயர் மாற்றப் போராட்ட வரலாறு” என்ற தலைப்பில் செல்வன் மா.மதன் குமார் அவர்களும் கருத்துரையாற்றினார்கள்.
இவ்விழாவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி மகாலட்சுமி யுவராஜ், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் திரு. வே.ராஜாராமன், இ.ஆ.ப., காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை அருள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் இயக்குநர் திருமதி க.பவானி உள்பட அரசு அலுவலர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்துக் கொண்டனர்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
No comments
Thank you for your comments