செவ்வாய்க்கிழமை தோறும் கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கும் முகாம் - மேலாண்மை இயக்குநர் தகவல்
காஞ்சிபுரம், ஜூலை 19-
காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் கீழ் செயல்படும் அனைத்து வங்கி கிளைகளிலும் செவ்வாய்க்கிழமை தோறும் கடன் வழங்கும் முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அவ்வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஆ.க.சிவமலர் வெள்ளிக்கிழமை பேசினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் கூட்டுறவு வங்கி கிளையில் 65 பயனாளிகளுக்கு ரூ.40லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஆ.க.சிவமலர் வழங்கி பேசியது.
கூட்டுறவு வங்கிகளில் கடன் நிலுவையை உயர்த்தும் வகையில் செவ்வாய்க்கிழமை தோறும் கடன் வழங்கும் முகாம்களை நடத்த உத்தரவிட்டுள்ளோம்.
இதன் மூலம் அனைத்து வகையான கடன்களையும் அதிக அளவில் வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டுப்புறக் கலைஞர்களுக்கான கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன், தனிநபர் கடன், சம்பளக்கடன், நுகர்வோர் கடன் உட்பட அனைத்து வகையான கடன்களும் பொதுமக்களுக்கு வழங்கப்படும்.
பொதுமக்களும் இந்த அரிய வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்களிடம் சேமிப்புத் தொகையை அதிகரிக்கும் வகையில் வியாழக்கிழமை தோறும் அதிக இட்டு வைப்பு சேகரிப்பு முகாம்களும் நடத்தப்படும்.
கடன் வழங்கும் முகாமையும்,இட்டு வைப்பு சேகரிக்கும் முகாமும் கூட்டுறவு வங்கியின் அனைத்து கிளைகளிலும் நடத்தப்பட்டு வருகிறது.
செய்யூர் வங்கிக் கிளையின் அருகில் உள்ள பள்ளியில் பயிலும் 250 மாணவர்களுக்கு துளிர் சேமிப்புக் கணக்கும் தொடங்கப்பட்டுள்ளது. துளிர் சேமிப்புக் கணக்கு தொடங்க விரும்பும் பள்ளிகள் அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம்.
இதன் மூலம் மாணவர்களிடையே சேமிப்புப் பழக்கத்தையும் வளர்க்கலாம் என்றும் ஆ.க.சிவமலர் பேசினார்.
விழாவிற்கு மத்தியக் கூட்டுறவு வங்கியின் உதவிப் பொதுமேலாளர்கள் சசிகுமார்,ராஜ்கண்ணன்,செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் வங்கி மேலாளர்கள்,பணியாளர்கள்,வங்கி வாடிக்கையாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments