உடற்பயிற்சியை அன்றாட வாழ்வின் அங்கமாக்கிக் கொள்ளுங்கள் - ஆட்சியர் வேண்டுகோள்
கோவை:
கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் மற்றும் ஹிந்துஸ்தான் மருத்துவமனை இணைந்து நடத்திய பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் கோவை நவ இந்தியா பகுதியில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்து, பத்திரிகையாளர்களுக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைகள் குறித்து கேட்டறிந்தார். ஹிந்துஸ்தான் மருத்துவமனை மருத்துவ இயக்குநர் டாக்டர் செந்தில்குமார், நிர்வாக இயக்குநர் டாக்டர் சதீஷ் பிரபு ஆகியோர் மருத்துவ பரிசோதனைகள் குறித்து விளக்கமளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது,
"கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் சார்பில் ஹிந்துஸ்தான் மருத்துவமனையுடன் இணைந்து நடைபெறும் மருத்துவ முகாம் சிறப்பாக நடந்து வருகிறது. தொடர்ச்சியாக உடல்நலத்தை கண்காணிக்கவும், வரும் முன் காப்போம் என்ற அடிப்படையிலும் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க இதுபோன்ற முகாம் அவசியமானது. வாழ்வியல் மாற்றம் காரணமாக வளமான உடல் ஆரோக்கியத்திற்கு யோகா, உடற்பயிற்சி போன்றவைகளை முறையாக தொடர்ந்து செய்ய வேண்டும். செய்தித் துறையில் அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகள் உடனுக்குடன் கொடுக்க வேண்டிய சூழல் உங்களுக்கு உள்ளது.
அதனால் உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பது மிகவும் அவசியமாக உள்ளது. இந்த நிலையில், பணி சூழல் காரணமாக காப்பீடு போன்ற பாதுகாப்பு ஊடகவியலாளர்களுக்கு அத்தியாவசியமானது. இந்த முகாமில் ஏதாவது உடல் ரீதியான பிரச்னைகள் கண்டறியப்பட்டால் அதனை நிவர்த்தி செய்யவும், அதற்கு சிகிச்சை எடுப்பதும் அவசியம் என்பதை மறந்து விடக்கூடாது என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய ஹிந்துஸ்தான் மருத்துவமனை மருத்துவ இயக்குனர் டாக்டர் செந்தில்குமார், வழக்கமாக அழுத்தம், சர்க்கரை நோய் மட்டுமின்றி ஊடகவியலாளர்கள் என்பதால் அவர்களின் பணியை கருத்தில் கொண்டு தைராய்டு, எலும்பு அடர்த்தி, நுரையீரல் செயல்பாடு போன்ற கூடுதல் தேவையான பரிசோதனைகள் முகாமில் இணைக்கப்பட்டுள்ளன.
வாரம்தோறும் ஹிந்துஸ்தான் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்படும் நிலையில், 50க்கும் மேற்பட்ட முகாம்கள் இந்த ஆண்டு நடத்தப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தினரையும் பங்கேற்க வைத்து பயனடையும் வகையில் இந்த முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட மருத்துவ தொழில்நுட்பக் கருவிகள் மூலம் இலவசமாக இந்த முகாமில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது என்றார்.
இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில், கோவை மாவட்டத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments