Breaking News

மிகக்குறைந்த பிரிமியத்தில் ரூ.15லட்சம் வரை விபத்துக்காப்பீடு - அஞ்சலகங்களில் அறிமுகம்




காஞ்சிபுரம், ஜூலை 30:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் மிகக்குறைந்த பிரிமியத்தை செலுத்தி விட்டு ரூ.15லட்சம் வரை காப்பீடு செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக கோட்டக் கண்காணிப்பாளர் ச.அருள்தாஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, 

ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்பிலான விபத்துக் காப்பீடு ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 ஆகிய ரூபாயில் காஞ்சிபுரம் மாவட்ட அஞ்சலகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி பொதுக்காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ரூ.10லட்சம், ரூ.15லட்சம் மதிப்புள்ள காப்பீட்டுக்கான பாலிசியை வழங்குகிறது.

இதற்கான கட்டணமாக ஆண்டுக்கு ரூ.520, ரூ.555, ரூ.755 ஆகிய பிரிமியமாக செலுத்த வேண்டும். மத்திய அரசால் சாமானிய மக்களுக்கும் விபத்துக் காப்பீட்டு திட்ட பயன்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வயது 18 நிரம்பிய எவரும் இத்திட்டத்தில் சேரலாம், தபால்காரர் கொண்டு வரும் கைபேசி சாதனத்தை பயன்படுத்தி 5 நிமிடத்தில் பாலிசி வழங்கப்படும்.

விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள், நிரந்தர ஊனம், நிரந்தரப் பகுதி ஊனம் ஆகியனவற்றுக்கு ரூ.10லட்சம், ரூ.15லட்சம் வரை இழப்பீடாக பெற்றுக் கொள்ளலாம். 

ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்து கொள்ளவும், தொலைபேசி மூலம் கணக்கில்லாமல் மருத்துவ ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளவும் முடியும்.

விபத்தினால் ஏற்படும் மருத்துவச் செலவுகளில் உள்நோயாளி செலவுகளுக்கு ரூ.ஒரு லட்சம் வரையும் பெற்றுக் கொள்ளலாம்.

விபத்தில் மரணமடைந்தவர்களின் குழந்தைகளில் இருவருக்கு கல்விச்செலவுகளுக்காக ரூ.1 லட்சமும், விபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் தினப்படி தொகையாக ரூ.1000 வீதம் 15 நாட்களுக்கும் வழங்கப்படுகிறது.

விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால் இறுதிச் சடங்கு செய்ய ரூ.5 ஆயிரமும் வழங்கப்படுகிறது. நிதி நெருக்கடி, உடல் நல நெருக்கடி ஆகிய பாதிப்புகளிலிருந்து குடும்பத்தின் எதிர்காலத்தை உறுதி செய்து கொள்ள உடனே இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறுமாறும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments