Breaking News

கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்

கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன்  தகவல்.

தமிழ்நாட்டில் உள்ள கிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறித்துவ அனாதை இல்லங்கள், தொழுநோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் போன்றோர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்க அரசு ஆணையிடப்பட்டுள்ளது.

இந்நலவாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட எல்லைக்குட்பட்ட திருச்சபைகளின் பேராயர்கள் மற்றும் ஆயர்கள் போன்ற அங்கீகாரம் செய்யப்பட்ட திருச்சபைகளிடமிருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். மேற்காணும் திருச்சபைகளின் பேராயர்கள் மற்றும் ஆயர்களின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரால் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.

 மேலும் இவ்வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஏனைய அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் போன்றே வழங்கப்படும். அதன் விவரம் பின்வருமாறு:

1.     கல்வி உதவித்தொகை 10-ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் படிப்பு, தொழிற்கல்வி, பட்டப்படிப்பு வரை

2.    விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித் தொகை ரூ.1,00,000/-

3.   விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித்தொகை ரூ.10,000/- முதல் ரூ.1,00,000/- வரை

4.    இயற்கை மரணம் உதவித்தொகை ரூ.20,000/-

5.    ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.5,000/-

6.   திருமண உதவித்தொகை ஆண்களுக்கு ரூ.3,000/- மற்றும் பெண்களுக்கு ரூ.5,000/-

7.    மகப்பேறு உதவித்தொகை ரூ.6,000/- மற்றும் கருச்சிதைவு/ கருக்கலைப்பு உதவித்தொகை ரூ.3,000/-

8.   கண் கண்ணாடி உதவித்தொகை ரூ.500/-

9.   முதியோர் ஓய்வூதியம் (மாதந்தோறும்) ரூ.1,000/-

மேலும் விவரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்  மற்றும்  சிறுபான்மையினர் நல 
அலுவலகத்தை  நேரில்  தொடர்பு   கொள்ளலாம்.

எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் இந்நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்கள்.

No comments

Thank you for your comments