காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ சுவாமி கோயிலில் தேரோட்டம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினார்கள்
படவிளக்கம் : தீர்த்தவாரி உற்சவத்தையொட்டி அனந்தசரஸ் திருக்குளத்தில் புனித நீராடிய பக்தர்கள்
காஞ்சிபுரம், மே 28:
காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயிலில் வைகாசித் திருவிழாவையொட்டி நடைபெற்ற தீர்த்தவாரி உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாது நீண்ட நேரம் காத்திருந்து அனந்தசரஸ் திருக்குளத்தில் புனித நீராடினார்கள்.
அத்திவரதர் பெருவிழா புகழுக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள பெருந்தேவித்தாயார் சமேத வரதராஜசுவாமி திருக்கோயில். இக்கோயில் வைகாசித்திருவிழா நிகழ் மாதம் 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான கருடசேவை நிகழ் மாதம் 22 ஆம் தேதியும்,26 ஆம் தேதி தேரோட்டமும் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.இந்த உற்சவத்தையொட்டி ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவர் வரதராஜப் பெருமாள் கோயில் அலங்கார மண்டபத்திலிருந்து 100 கால் மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
பின்னர் பிராணதார்த்தி ஹரி வரதர் எனும் தீர்த்தபேரர் சிறிய பல்லக்கில் திருக்கோயில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்திற்கு எழுந்தருளப்பட்டார்.
தீர்த்தபேரரருக்கு திருக்குளத்தின் படியில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து கோயில் பட்டாச்சாரியார் ஒருவர் தீர்த்தபேரருடன் திருக்குளத்தில் மூழ்கி புனித நீராடினார்.
பின்னர் ஆலய பட்டாச்சாரியார்கள், தீர்த்தவாரி உற்சவத்தை பார்வையிட வந்திருந்த பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அனந்தசரஸ் திருக்குளத்தில் இறங்கி புனித நீராடினார்கள்.
கத்தரி வெயில் நிவர்த்தி நாளாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததையும் பொருட் படுத்தாது பக்தர்கள் தீர்த்தபேரர் திருக்குளத்துக்கு வரும் வரை காத்திருந்து புனித நீராடினார்கள்.வாண வேடிக்கைகளும் நடைபெற்றன.
காஞ்சிபுரம் எஸ்பி கே.சண்முகம் நேரடி மேற்பார்வையிலும் ஏடிஎஸ்பி பாலகுமாரன்,காஞ்சிபுரம் டிஎஸ்பி முரளி ஆகியோர் தலைமையிலும் ஏராளமான போலீஸார் திருக்குளத்தை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆர்னிஷா பிரியதர்ஷினி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் திருக்குளத்திற்குள் மிதவைகள் மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தீர்த்தவாரி உற்சவத்திற்குப் பிறகு பெருமாள் 100 கால் மண்டபத்திலிருந்து மங்கல மேள வாத்தியங்களுடன் ஆலயத்துக்கு எழுந்தருளினார். இன்று வெற்றி வேர் சப்பரத்தில் பெருமாள் வீதியுலா வருவதோடு விழா நிறைவு பெறுகிறது.
No comments
Thank you for your comments