Breaking News

சிலம்பம், கிக் பாக்சிங் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற வீரர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

படவிளக்கம் :  உத்தரமேரூரில் பொதுமக்களால் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள்

காஞ்சிபுரம், மே 29

மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் மற்றும் கிக் பாக்சிங் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் வென்றவர்களுக்கு உத்தரமேரூரில் பொதுமக்கள் புதன்கிழமை உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நிகழ் மாதம் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை தேசிய அளவிலான கிக்பாக்சிங் மற்றும் சிலம்பம் தொடர்பான போட்டிகள் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரை சேர்ந்த இளம் சிறார்கள் 10க்கும் மேற்பட்டோர் இப்போட்டிகளில் பங்கேற்றனர். இவர்களில் உத்தரமேரூரை சேர்ந்தவர்களான சிரனிகா சிலம்பத்திலும் அர்சன், ரிதிஷ், அஜய் ஆகியோர் கிக்பாக்சிங் போட்டியிலும் தங்கம் வென்றனர். மாணவியர் நிசாந்திரி, தரனிகா ஆகியோர் சிலம்பப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று சொந்த ஊரான உத்தரமேரூருக்கு வந்த இவர்களை வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் மங்கல மேளதாளங்கள் முழங்கவும்,பட்டாசுகள் வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். விளையாட்டு வீரர்களுக்கு சால்வையும், மாலைகளும் அணிவித்து உற்சாகப்படுத்தினார்கள்.



No comments

Thank you for your comments