Breaking News

பொறுப்புள்ள குடும்ப உறுப்பினர்களாக இருக்க வேண்டியது அவசியம் - கல்லூரி மாணவர்களுக்கு ஸ்ரீ விஜயேந்திரர் அறிவுரை

காஞ்சிபுரம், ஏப்.9:

பொறுப்புள்ள குடும்ப உறுப்பினர்களாக இருந்து அர்த்தமுள்ள வாழ்க்கையை இளைஞர்கள் வாழ்ந்து காட்ட வேண்டும் என காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செவ்வாய்க்கிழமை பேசினார்.

 


காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் பல்வேறு பாடங்களுக்கான துறைகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், தேசிய, மாநில அளவில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று காஞ்சிபுரத்துக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் ஆகியோருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திரர் அருளாசி வழங்கினார்.இதனையடுத்து அவர்களுக்கு அறிவுரை வழங்கி அவர் மேலும் பேசியது.

காஞ்சி மடாதிபதி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் தேசபக்தி உடைய இளைஞர்களை உருவாக்க காஞ்சிபுரத்தில் சங்கரா கல்லூரியை நிறுவி அதில் கிராமப்புற மாணவர்கள் ஏராளமானோர் கல்வி பயின்று வருகின்றனர்.திறமைகளை கண்டறிந்து வேலைவாய்ப்புகளை அளிக்க சமுதாயக்கல்லூரியும் நடந்து வருகிறது. 

திருப்புகள், திருவாசகம், திருக்குறள், நாலாயிர திவ்யப்பிரபந்தம் ஆகியனவற்றை படித்து பக்தி,கலாச்சாரம்,இசை இவை மூன்றையும் செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.எந்த தொழிலை செய்தாலும் அதில் நேர்மை,நேரம் தவறாமை,அதன் மீது பக்தி இவை மூன்றையும் கடைப்பிடித்தால் வாழ்வில் சிறந்து விளங்க முடியும்.

இன்றைய இளைஞர்கள் முக்கியமாக பொறுப்புள்ள குடும்ப உறுப்பினர்களாகவும்,சமுதாய சேவகர்களாகவும், இறை நம்பிக்கை உடையவர்களாகவும் வாழ்ந்திட வேண்டும்.பொறுப்புள்ள மனிதர்களாக இருந்து கலாச்சாரத்தை பின்பற்றி அர்த்தமுள்ள வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

சிறந்த வாழ்க்கை முறையை உலகத்துக்கு எடுத்துக் காட்டியது இந்து சமயமேயாகும். மக்களுக்கு உதவி செய்ய வேண்டியது அவசியம். ஆனால் அந்த உதவியை பெறுபவருக்கு அது திருப்திதரக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

உதவி என்பது அறத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். கல்வியில் முன்னேறும் போது கலாச்சாரத்தில் பின்தங்கி விடக்கூடாது என்றும் ஸ்ரீ விஜயேந்திரர் பேசினார்.

நிகழ்வின் போது ஸ்ரீமடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர்,காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், சிறந்த மாணவர் விருது பெற்றவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களும் உடன் இருந்தனர்.

No comments

Thank you for your comments