மோட்டூர் ஸ்ரீ எத்திராஜப் பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அருகே மோட்டூர் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ தேவி,பூதேவி சமேத எத்திராஜப் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மகா கும்பாபிஷேகத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத மூலவர் எத்திராஜப் பெருமாள்
காஞ்சிபுரம் அருகேயுள்ள சிறுவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீதேவி, பூதேவி சமேத எத்திராஜப் பெருமாள் கோயில்.
இக்கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி நிகழ் மாதம் 19 ஆம் தேதி விஸ்வ சேனர் பூஜையுடன் யாகசாலை பூஜைகள் விஷ்ணுகாஞ்சிபுரம் பி.எல்.வெங்கடகிருஷ்ணன் தலைமையில் தொடங்கியது. மறுநாள் 20 ஆம் தேதி மகாலட்சுமி ஹோமம், கோ. பூஜை, புதிய சுவாமி சிலைகளை ஆலயத்தில் நிர்மாணித்தல் ஆகியன நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக 21 ஆம் தேதி மகா பூரணாகுதி தீபாரதனைக்குப் பின்னர் புனிதநீர்க்குடங்கள் கோபுரகலசங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் மூலவர் ஸ்ரீதேவி,பூதேவி சமேத வெங்கடராஜப் பெருமாள்,பரிவார தெய்வங்களான ஆஞ்சநேயர்,கருடாழ்வார், ஹயக்ரீவர்,தன்வந்தரி,வராக மூர்த்தி உள்ளிட்டவற்றுக்கும் சிறப்பு அபிஷேகமும்,அலங்கார தீபாராதனைகளும், ஆலய நிர்வாகத்தின் சார்பில் அன்னதானமும் நடைபெற்றது.
விழாவில் காமாட்சி சுவாமிகள்,நத்தக்கொல்லை அனுமத் கீதானந்த மாதாஜி, சிவனடியார் திருக்கூட்டத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வி.கண்ணன் ஐயர் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை ஆலய திருப்பணிக்குழுவினர்,கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
No comments
Thank you for your comments