Breaking News

தமிழ்நாட்டில் இறுதி வாக்குப்பதிவு நிலவரம்.. 69.72 சதவீத வாக்குகள் பதிவு

 சென்னை: 

இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி வாக்குப்பதிவு நிலவரத்தின்படி, தமிழ்நாட்டில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக தருமபுரி மக்களவைத் தொகுதியில் 81.20 சதவீதமும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் 79.21 சதவீதமும் மற்றும் கரூர் மக்களவைத் தொகுதியில் 78.70 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.



குறைந்தபட்சமாக மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் 53.96 சதவீதமும், தென் சென்னை மக்களவைத் தொகுதியில் 54.17 சதவீதமும் மற்றும் வடசென்னை மக்களவைத் தொகுதியில் 60.11 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

மேலும், "தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நேற்று முன் தினம் (ஏப்ரல்.19) நடைபெற்று முடிந்துள்ள நிலையில், ஒரு சில இடங்களில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டது. சில இடங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்திருந்தனர். 

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் தேர்தல் சுமூகமாக நடைபெற்று முடிந்தது. அதனால் எந்த தொகுதியிலும் மறுவாக்குப் பதிவு நடைபெறாது” என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார்.

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசம் என மொத்தம் 102 தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் (ஏப்.19) மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்தது.

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் சுமார் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 பேர் வாக்களிக்க மாநிலம் முழுவதும் 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு விறுவிறுப்பாகத் துவங்கிய வாக்குப்பதிவில் முதல்முறை வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலரும் உற்சாகமாக வந்து வாக்களித்துவிட்டுச் சென்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் பிரமுகர்களும், திரைப் பிரபலங்களும் என அனைவரும் அவரவர் தொகுதிகளில் மக்களுடன் மக்களாக வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். வாக்குப்பதிவு நாளான அன்று மாலை 7 மணி நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 20) இரவு 07.08 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டில் பதிவான மொத்த வாக்குப்பதிவு 69.46 சதவீதம் என இந்தியத் தேர்தல் ஆணையம் தகவல் வெளியிடப்பட்டது.

தற்போது மூன்றாவது முறையாக இன்று (ஏப்ரல் 21) பிற்பகல் 12.44 மணியளவில் வெளியிடப்பட்ட இறுதி வாக்குப்பதிவு நிலவரத்தின்படி, தமிழ்நாட்டில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக தருமபுரி மக்களவைத் தொகுதியில் 81.20 சதவீதமும், கள்ளக்குறிச்சி 79.21 சதவீதமும் மற்றும் கரூர் 78.70 சதவீதமும். குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 53.96 சதவீதமும், தென் சென்னையில் 54.17 சதவீதமும் மற்றும் வடச்சென்னை 60.11 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

நேற்று (ஏப்ரல் 20) இரவு 7.08 மணிக்கு வெளியிட்ட வாக்குப்பதிவு அறிவிப்பின் படி தருமபுரி தொகுதியில் 81.48 சதவீதம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இன்று (ஏப்ரல் 21) வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்குப்பதிவு அறிவிப்பில் தருமபுரி தொகுதியில் 81.20 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 0.28 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

அதே போல் நேற்று (ஏப்ரல் 20) மத்திய சென்னையில் 53.91 சதவீத வாக்குப்பதிவு என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இன்று (ஏப்ரல் 21) வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்குப்பதிவு அறிவிப்பில் மத்திய சென்னையில் 53.96 சதவீதம் என 0.05 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 72.44 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 2024ஆம் ஆண்டு தேர்தலில் கிட்டத்தட்ட 3 சதவீதம் வாக்குகள் குறைவாகவே பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட வாரியாக வாக்குபதிவு விவரங்கள் :

  1. திருவள்ளூர் - 68.59,
  2. வடசென்னை - 60.11,
  3. தென்சென்னை- 54.17 ,
  4. மத்திய சென்னை - 53.96
  5. ஸ்ரீபெரும்புதூர் - 60.25
  6. காஞ்சிபுரம்- 71.68
  7. அரக்கோணம் - 74.19
  8. வேலூர் - 73.53
  9. கிருஷ்ணகிரி - 71.50
  10. தர்மபுரி - 81.20
  11. திருவண்ணாமலை - 74.24
  12. ஆரணி - 75.76
  13. விழுப்புரம் - 76.52
  14. கள்ளக்குறிச்சி - 79.21
  15. சேலம் - 78.16
  16. நாமக்கல் - 78.21
  17. ஈரோடு - 70.59
  18. திருப்பூர் - 70.62
  19. நீலகிரி - 70.95
  20. கோவை - 64.89
  21. பொள்ளாச்சி - 70.41
  22. திண்டுக்கல் - 71.14
  23. கரூர் - 78.70
  24. திருச்சி - 67.51
  25. பெரம்பலூர் - 77.43
  26. கடலூர் - 72.57
  27. சிதம்பரம் - 76.37
  28. மயிலாடுதுறை - 70.09
  29. நாகப்பட்டினம் - 71.94
  30. தஞ்சாவூர் - 68.27
  31. சிவகங்கை - 64.26
  32. மதுரை - 62.04
  33. தேனி - 69.84
  34. விருதுநகர்- 70.22
  35. ராமநாதபுரம் - 68.19
  36. துாத்துக்குடி - 66.88
  37. தென்காசி - 67.65
  38. திருநெல்வேலி - 64.10
  39. கன்னியாகுமரி- 65.44

No comments

Thank you for your comments