வேலூர் மாநகராட்சியில் விதிமீறிய ஜவுளி கட்டிடம் விரைவில் சீல் ?
வேலூர், ஏப்.22-
வேலூர் மாநகராட்சி பகுதியில் சில வணிக கட்டிடங்கள் முறையான அனுமதியின்றியும், போதுமான “பார்க்கிங்”, பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் கட்டப்படுவது தற்போது அதிகரித்து வருகிறது. மாநகராட்சி அனுமதித்த வரைபடம் அடிப்படையில் பெரும்பாலான வணிக கட்டிடங்கள் கட்டப்படுவதில்லை. மேலும், கட்டிடம் முழுவதுக்கும் அனுமதி பெறுவதில்லை. இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்நிலையில், இதுகுறித்து தொண்டு நிறுவனம் ஒன்று ஆர்டிஐ தகவல் கோரியதில், சில கட்டிடங்கள் Tamil Nadu Town and Country Planning Act, 1971-ன் விதியின் படி முற்றிலுமாக விதிமீறியுள்ளது அம்பலமானது. அதாவது, பார்க்கிங் இடத்தில் வணிக வளாகம், குறைவான இடத்துக்கு அனுமதி பெற்று அதிகளவில் கட்டிடம், வீடு என அனுமதி பெற்று தங்கும் விடுதியாக செயல்படுவது என பல்வேறு விதிமீறல்களுடன் கட்டிடங்கள் இயங்குவது தெரியவந்தது. இதனையடுத்து தொண்டு நிறுவனம் ஒன்று வேலூர் மாவட்ட ஆட்சியர், உள்ளூர் திட்ட குழுமம், மாநகராட்சிக்கு புகார் அளித்தது.
இதனடிப்படையில் அண்மையில் திறக்கப்பட்ட எண்ணம் ஜவுளி கட்டிடம் மீது உள்ளூர் திட்ட குழுமம் அமலாக்க நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு வலியுறுத்தியது. ஆனால் வேலூர் மாநகராட்சி மெத்தனமாக உள்ளது. இந்த நிலையில், உள்ளூர் திட்ட குழுமம் அதிரடியாக, விதிமீறிய கட்டிடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புகாரின் பேரில் ஜவுளி கட்டிடத்தை ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள் விதிமீறல் உள்ளது என்பதை கோடிட்டு காட்டியுள்ளனர். பெயரளவுக்கு நோட்டீஸ் வழங்கிவிட்டு எந்த வித நடவடிக்கை எடுக்காமல் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த ஜவுளி கட்டிடம் மீது நடவடிக்கை எடுக்காமல் தயக்கம் காட்டுவது ஏன்? மில்லியன் டாலர் கேள்வி...
மாநகராட்சி ஆய்வில் விதிமீறல்கள் என்னென்ன?
1. ஜவுளி கட்டிடம் அனுமதிக்கு மாறுதலாக கட்டப்பட்டுள்ளது.
2. தரைகீழ் தளம் வாகனம் நிறுத்தும் இடமாக அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தரைதளம் கட்டப்பட்டு அப்பகுதியில் வணிக உபயோகமாக பயன் படுத்தப்படுகிறது.
3. வரைபடத்தில் குறிப்பிட்டுள்ள படி காற்றோட்ட வசதிக்காக அனுமதிக்கப்பட்ட ஜன்னல்கள் அமைக்கப்படவில்லை.
4. அனுமதி வழங்கப்பட்ட வரைபடத்திற்கு மாறாக படிக்கட்டுகள் மற்றும் லிப்ட் அமைப்புகள் இடம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
5. இந்த ஜவுளி கட்டிடத்திற்கு வரி விதிப்பு ஏதும் செய்யப்படவில்லை.
6. இந்த கட்டிடத்திற்கு பணிமுடிவு அறிக்கை சான்று வழங்கப்படவில்லை என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதேபோன்று உள்ளூர் திட்ட குழுமம் கட்டிட நிறைவு சான்று வழங்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் எவ்வாறு மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து மின்சார துறையில் விசாரிக்கையில், கட்டிட முடிவு சான்று விண்ணப்பத்துடன் வழங்கி உள்ளனர் என்றும், மாநகராட்சியில் வழங்கியதாகவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து மேலும் விசாரிக்கையில், கட்டிட முடிவு சான்றில் முறைகேடு நடைபெற்றுள்ளதா? என்று மில்லியன் டாலர் கேள்வி...
இதுமட்டுமின்றி, தரைதளத்தை விட முதல் தளம் முதல் நான்கு தளம் வரை விரிவு படுத்தி கட்டப்பட்டுள்ளது.
அனுமதி பெற்ற அளவை விட அதிகமான அளவில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. இவ்வாறு அடுக்கடுக்கான விதிமீறல்களும் முறைகேடுகளும் உள்ளதாக இந்த ஜவுளி கட்டிடம் மீது புகார்கள் எழுந்துள்ளன.
ஆய்வு செய்த பின்பும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது ஏன்?
மருத்துவமனை சாலை என்பதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக உள்ளது. ஏதேனும் விபரீதம் நடந்தபின்புதான் மாநகராட்சி துரித நடவடிக்கை எடுக்குமா?
விதி மீறிய கட்டிடங்கள் மீது இனியாவது வேலூர் மாநகராட்சி கட்டிடப்பணி நடைபெறும் போதே ஆய்வு செய்து முறையான நடவடிக்கை எடுக்குமா? இல்லை மெத்தன போக்குடன் செயலாற்றுமா? விதிமீறிய கட்டிடங்களுக்கு சீல் நடவடிக்கை பாயுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
“கட்டிட முடிவு சான்று வழங்கியது யார்?
கட்டிடப்பணி நடைபெறும் போது ஆய்வு செய்தது யார்?
மின் இணைப்பு பெற்றது எப்படி?
தீயணைப்பு பாதுகாப்ப சான்று பெறப்பட்டுள்ளதா?
என பல கேள்விகளுக்கு உண்மை தகவல்களுடன் மேலும் தொடரும்...”
No comments
Thank you for your comments