Breaking News

கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக உழைக்கிற ஆட்சி பாஜக - நெல்லை வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸை ஆதரித்து கனிமொழி பிரச்சாரம்

ஆலங்குளம் :

நெல்லை பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸை ஆதரித்து  திமுக மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்தார்.


அப்போது அவர் பேசுகையில்,  

இந்தத் தேர்தலில் நாம் அனைவரும் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். நாற்பது நமது , நாடும் நமதாக வேண்டும். சாமானிய மக்களின் நாடாகவும் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும், அடித்தட்டு மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப் பட்டவர்களுக்கும், ஆண்கள்-பெண்கள் என  அனைவருக்கும் சமூக நீதி வழங்கக்கூடிய நாடாக இருக்கவேண்டும். 

பத்து ஆண்டு கால பாஜக ஆட்சியில் மோடிக்கும் அதற்கு பிறகு அம்பானிக்கும், அதானிக்கும் சொந்தமானமாதாக இருந்து கொண்டி ருக்கிறது. சாதாரண மக்களுக்கான நாடாக இல்லை. 

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றால் அதற்கு அவர்கள் பேசுவதில்லை.

ஆனால் அம்பானிக்கு அதானிக்கோ ஆதாயமாக ஆஸ்திரேலியா, பங்களா தேஷ் போன்ற எந்த நாட்டில் வேண்டுமானாலும் பேசுவார்கள்.

நாங்கள் தூத்துக்குடியில் இன்டர் நேஷனல் ஏர்போர்ட் கேட்டால் உங்களுக்கெல்லாம் எதற்கு என கேட்கிறார்கள். 

ஆனால் அம்பானி வீட்டு கல்யாணத்திற்கு நாட்டின் பாதுகாப்பு எதையும் கவலை கொள்ளாமல் பத்து நாளில் ஒரு சர்வதேச ஏர்போர்ட்டை கல்யாண கிப்ட்டாக கொடுக்கிறார்கள். இப்படி பணக்காரர்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் மட்டுமே உழைக்கிற ஆட்சியாக பாஜக  திகழ்கிறது. 

விவசாயிகள் தாங்கள் விளைவிக்கிற பொருட்களுக்கு  அடிப்படை ஆதாய விலை வேண்டும் என டெல்லிக்கு  வெளியில போராடினார்கள். அவர்களை டெல்லிக்குள் வரவிடாமல் சாலையில் வாகனங்களை பஞ்சர் செய்வதற்காக ஆணிகள் பதிக்கப்படுகிறது. கம்பி வேலிகள், சிமெண்ட் தடுப்புகள் அமைத்து அவர்களை தடுத்து நிறுத்துகின்றனர். 

விவசாயிகளை தீவிரவாதிகள் போல் சித்தரிக்கப்பட்டனர். விவசாயிகள் கடனை கட்ட முடியவில்லை என கெஞ்சினால் ரத்து செய்ய வில்லை. 

ஆனால் கார்பரேட் கம்பெனிகளுக்கு 68 ஆயிரம் கோடி கடன் ரத்து செய்திருக்காங்க.  

இந்த ஆட்சி வருமுன் கேஸ் சிலிண்டர் விலை ரூ.410, இப்போது ரூ.1100. கேஸ்க்கு மானியம் வரும் என்றார் பிரதமர், வருகிறதா? ஒன்றியத்திலே நமது இந்திய கூட்டணி ஆட்சி வந்தவுடன் உறுதியாக நமது முதலமைச்சர் கேஸ்  சிலிண்டர் விலை ரூ.500, பெட்ரோல் ரூ.75, டீசல் ரூ.65 க்கு கிடைக்கும். 

கடந்த தேர்தல் நேரத்தில் முதல்வர் பெண்களுக்கு  ஆயிரம் ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதாக கூறினார்கள். இப்போது தமிழகம் முழுவதும் 1 கோடி 15  லட்சம் பெண்களுக்கு  மகளிர் உரிமைத் தொகை  வழங்கப்படுகிறது.

ஒரு சில பெண்களுக்கு கிடைக்காமல் இருப்பதாக தெரிகிறது. தேர்தலுக்குப் பிறகு முகாம் அமைத்து அவை சரி செய்யப்படும். நம் வீட்டு பெண் பிள்ளைகள் கல்லூரி படிப்பிற்கு புதுமைப் பெண் திட்டம் மூலம் ரூ.1000 தருவது திமுக ஆட்சி. அதே போல் நமது வீட்டு இளைஞர்கள் கல்லூரி படிப்பிற்கு தமிழ்  புதல்வன் திட்டம் மூலம் ஆயிரம் வழங்க இருப்பதும் திமுக ஆட்சியில் தான். 

நம்முடைய வரிப்பணத்தை எல்லாம் ஜிஎஸ்டி மூலம் பாஜக ஆட்சி வாங்கிக் கொள்கிறது. நாம் ஒரு ரூபாய் கொடுத்தால் நமக்கு திருப்பிக் கொடுப்பது 25 அல்லது 26 பைசா தான்.

ஆனால் உத்தரப்பிர தேசம் போன்ற மாநிலங்களுக்கு ஒரு ரூபாய் ஜிஎஸ்டி கட்டினால் இரண்டு ரூபாய் திருப்பிக் கொடுக்கிறார்கள். 

இத்தனை நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் நமது முதலமைச்சர் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். 

தமிழ்நாட்டில் வெள்ள வந்தபோது பாஜக-வில் இருந்தோ அல்லது ஒன்றிய அமைச்சர்களோ, பிரதமரோ யாராவது ஒரு பைசா தமிழ்நாட்டுக்கு கொடுத்தார்களா? 

ஆனால் 6000 ரூபாய் கொடுத்தவர் நமது முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.  அதேபோல் வீடு இடிந்தவர்களுக்கு எந்த மாநிலமும் கொடுக்காத அளவிற்கு நான்கு லட்சம் ரூபாய் கொடுத்தது நமது திராவிட முன்னேற்றக் கழக அரசு.

தேர்தலில் ஓட்டு கேட்க இங்கு வரும் பாஜகவினரிடம், தமிழ்நாட்டில் மழை வெள்ளம் வந்த போது ஒரு ரூபாய் கொடுத்தீர்களா என கேளுங்கள். 

மறுபடியும் ஒன்றியத்தில் பாஜக வருவதற்கு சாத்தியமே இல்லை. இங்கு இருக்கும் சகோதர சகோதரிகளுக்கு சொல்கிறேன். அப்படி ஒரு விபத்து ஏற்பட்டு மீண்டும் பாஜக  ஆட்சிக்கு வந்தால் இதுதான் கடைசி தேர்தலாக இருக்கும். இதற்கு அப்புறம் தேர்தலே வராது சர்வாதிகாரம் மட்டுமே மிஞ்சியிருக்கும் என்பதை  மனதில் வைத்துக் கொண்டு இந்தத் தேர்தலிலே இந்திய கூட்டணி ஆட்சியை பிடிக்க வேண்டும். 

அதுதான் இந்த நாட்டுக்கும் நல்லது நாட்டு மக்களுக்கும் நல்லது என்கிற உணர்வோடு நமது வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ்-க்கு கை சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களை எல்லாம் வேண்டி கேட்டுக் கொள்கிறேன் என பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப் பாளர் ஆலடி எழில்வாணன், ஒன்றிய செயலாளர் ஆலங்குளம் செல்லத்துரை கீழப்பாவூர் கிழக்கு சிவன் பாண்டியன், யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், நகர செயலாளர் வக்கீல் நெல்சன், மணிமாறன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் கோமதிநாயகம், வக்கீல் சுப்பையா காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தலைவர் ரூபன் தேவதாஸ், நகர தலைவர் வில்லியம் தாமஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் போது சமத்துவ மக்கள் கட்சியின் ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் ஜெயபால் கனிமொழி எம்பி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.


மேலும், பாளை மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் வணிகர்களைச் சந்தித்து ஆதரவு கோரினார்.

No comments

Thank you for your comments