வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் அபாயம்! - விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?
வேலூர் :
வேலூர் புதிய பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் புதுப்பொலிவுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் பேருந்து நிலையம் சரியான முறையில் பராமரிப்பு செய்யப்படாமல் ஆங்காங்கே குண்டும் குழியுமாக, பள்ளம் விழுந்து அபாய நிலையில் உள்ளது. பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அச்சத்துடன் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது. தன் உயிரை பணையம் வைத்து பயணிகளும் பீதியுடன் நடந்து செல்கின்றனர். இந்த பள்ளத்தால், பெரும் விபத்து ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாநகராட்சியில் புதிய பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் புதுப்பொலிவுடன் திறக்கபட்டது. ஆனால் இந்த பேருந்து நிலையத்தின் தரம் கேள்வி குறியாக உள்ளது. ஒப்பந்ததாரர்களின் பணியை போற்றும் விதமாக பள்ளங்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கும், பயணிகளுக்கு அச்சத்தையும் ஆபத்தையும் ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
இதற்கு முன்பு இருந்த பேருந்து நிலையம் மற்றும் ஓடுதளம் ஆகியவை மிகவும் அழுத்தமாகவும், உடையாமலும், ஸ்திரத்தன்மையுடனும் இருந்தது.
ஆனால் தற்போதுள்ள புதிய பேருந்து நிலையத்தில் போடப்பட்டுள்ள ஓடுதளம் தரமற்றதாக உள்ளது. அதற்குள்ளாக பேருந்து நிலையம் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலைக்கு மாறியுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் இந்த பேருந்து நிலையத்தை பார்த்து இப்படி ஒரு பேருந்து நிலையத்தை நாங்கள் எங்கும் கண்டதில்லை என்று முகம் சுளிக்கும் அளவிற்கு இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.
குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் அவசர கோலத்தில் அள்ளித் தெளிக்கப்பட்ட சாணம் போல இந்த பேருந்து நிலைய பணிகள் அமைந்துள்ளது என்று விவரம் அறிந்தவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பேருந்து நிலையம் என்றால் அடிப்படை வசதிகள் அனைத்தும் இருக்க வேண்டும். ஓடுதளம் குறிப்பாக மிகவும் ஸ்திரத்தன்மையுடனும், உறுதியுடனும், உடையாத அளவிற்கு மிகவும் உறுதித் தன்மையுடனும் அமைக்கப்பட வேண்டும் என்பது விதி.
வேலூர் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் மிகப்பெரிய பணியாக புதிய பேருந்து நிலைய கட்டுமான பணி சுமார் 9.25 ஏக்கர் பரப்பளவில் ரூ.53 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் அதன் தரம் இன்று கேள்வி குறியாக உள்ளது.
இதற்கு முக்கிய காரணம், லட்சக்கணக்கில் “கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்..” இது மூன்று மட்டும்தான் என மாநகராட்சி அலுவலர்கள் சிலர் பணியாற்றியதே என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதற்கு முக்கிய காரணமானவர் தற்போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரின் உதவியாளராக பணியாற்றுபவர் ஆவார்... இவர், வேலூர் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் தொடங்கியவுடன், வேலூருக்கு பணிமாற்றம் வாங்கிகொண்டு வந்து “கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்..” என்ற தாரக மந்திரத்துடன் பணியாற்றிவிட்டு, தற்போது அமைச்சருக்கு உதவியாளராக பணி மாற்றம் பெற்று சென்றுவிட்டார்..
தற்போது அமைச்சரின் உதவியாளராக பணியாற்றும் இவர், மாநகராட்சி அலுவலர்களிடம் மாதந்தோறும் கப்பம் கட்டவேண்டும் என்று தனி ராஜாங்கம் நடத்திவருகிறார் என்றும், கமிஷன் வாங்குவதில் வல்லவர் என்றும் மாநகராட்சி வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டுவருகிறது.
இவருக்கு, வேலூர் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப் பணிகளில் உதவியாக இருந்து பெரும் பங்காற்றியவர் “செல்வம்” பெயர்கொண்டவர் ஆவார். இவர் மீது தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று பேருந்துநிலைய பணியை ஆய்வு செய்யுமாறு புகார் அளித்தனர். ஆனால் அந்த புகார் மீது மாநகராட்சி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
“கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்..”&இதனால் இன்று பேருந்து நிலையம் பல் இளிக்க ஆரம்பித்துவிட்டது என்றே சொல்லலாம். இப்படி ஒரு பேருந்து நிலையத்தை தமிழகத்தில் வேறு எங்கும் காண முடியாது என்றும் சொல்லலாம்.
அதற்குள் குழி விழுந்து காணப்படுகிறது. அதில் ஒரு குச்சியை நட்டு அதன் மீது அட்டைப்பெட்டியை வைத்து இந்த பக்கம் வராதே என்று சொல்லும் அளவிற்கு நிலைமை படு மோசமாக சென்றுள்ளது.
இந்த பேருந்து நிலையத்தை பராமரித்து வரும் வேலூர் மாநகராட்சி நிர்வாகம் மிகவும் மோசமான நிலையில் பராமரிப்பு பணி செய்கிறாதா என்ற கேள்வி நம்முன் எழுகிறது.
ஏதோ கூலிக்கு மாரடிப்பது போன்று யார் வீட்டு இழவோ பாய் போட்டு அழுகிறது என்ற ரீதியில் இந்த பேருந்து நிலையம் பராமரிக்கப்பட்டு வருகிறது என்பதும் இங்கு குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். அந்த அளவிற்கு இந்த பேருந்து நிலையம் கோடிக்கணக்கில் செலவு செய்து கட்டி விட்டு பணி தரம் இல்லாததால் இந்த பேருந்து நிலையம் எவ்வளவு சீக்கிரம் இடிந்து விழப் போகிறது என்று பொதுமக்கள் பேசும்பொருளாக மாறியுள்ளது.
மக்களின் வரிப்பணத்தில் இப்படி தரமில்லாத பேருந்து நிலையத்தை கட்டிய ஒப்பந்ததாரர் முதல் ஆய்வு செய்த அதிகாரிகள் வரை அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். திட்டப்பணிக்காக ஒதுக்கப்பட்ட மக்களின் வரி பணத்தை திருப்பி செலுத்தமாறு செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே மக்களுக்கான நலதிட்ட பணிகள் செவ்வனே நடைபெறும்.
மக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல் மக்களின் வரி பணத்தை கொள்ளையடிக்கும் நோக்குடன் செயல் பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டம் சட்டரீதியான நடவடிக்கையை விரைந்து எடுக்க தமிழக அரசு தயக்கம் காட்டாமல் முன்வர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள், வேலூர் மாநகர பொதுமக்கள் மற்றும் பயணிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
புதிய பேருந்து நிலையத்தை உரிய முறையில் பராமரிப்பு பணி நடைபெறுகிறதா? என்று மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்யவேண்டும். தமிழக அரசும், மாநகராட்சியும் இதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...
No comments
Thank you for your comments