காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி நடவாவிக்கிணற்றில் இறங்கும் உற்சவம் - பூமிக்கடியில் நடைபெறும் திருவிழா
காஞ்சிபுரம், ஏப்.24:
சித்ரா பௌர்ணமியையொட்டி காஞ்சிபுரம் அருகே சின்னஐயங்கார்குளம் என்ற கிராமத்தில் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்ட கிணறு ஒன்று உள்ளது.இக்கிணற்றிலிருக்கும் தண்ணீர் ஆண்டுக்கு ஒருமுறை வெளியேற்றப்பட்டு அதனுள் வரதராஜசுவாமி இறங்கி வெளியில் வரும் நிகழ்வுக்கு நடவாவிக்கிணறு உற்சவம் எனப்படுகிறது.
பெருமாளின் வருகையையொட்டி கிணற்றில் உள்ள தண்ணீர் மோட்டார் வைத்து வெளியேற்றப்பட்டு சுத்தப் படுத்தப்பட்டிருந்தது.
கிணற்றுக்குள் 48 படிகள் இறங்கி உள்ளே சென்று அதனுள்ளே உள்ள சிறிய மண்டபத்தில் இளைப்பாறக்கூடிய வகையில் அக்கிணறு வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நடவாவிக்கிணறு விழாவையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் தேவராஜசுவாமி செவ்வாய்க்கிழமை ஆலயத்திலிருந்து கேடயத்தில் புறப்பட்டு செவிலிமேடு, புஞ்சை அரசந்தாங்கல்,தூசி ஆகிய கிராமங்களில் உள்ள மண்டகப்படியில் சேவை சாதித்து சின்ன ஐயங்கார்குளம் கிராமத்தில் உள்ள சஞ்சீவிராயர் ஆலயத்துக்கு எழுந்தருளினார். அங்கு சிறப்புத் திருமஞ்சனமும், தீபாராதனைகளும் நடைபெற்ற பின்னர்அதன்அருகேயுள்ள நடவாவிக் கிணற்றுக்குள் இறங்கி தீபாராதனை நடைபெற்றது.
கிணற்றுக்குள் இருந்த அறைக்குள் சிறிது நேரம் தங்கி ஓய்வெடுத்த பின்னர் அங்கிருந்து பாலாற்றங்கரைக்கு எழுந்தருளி பத்தி உலாத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் அறநிலையத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் தேசிகன் சந்நிதிக்கு எழுந்தருளினார்.
அங்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்ற பின்னர் வரதராஜசுவாமி ஆலயத்துக்கு வந்து சேர்ந்தார்.ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் எஸ்.சீனிவாசன் தலைமையிலான கோயில் பட்டாச்சாரியார்கள் செய்திருந்தனர்.
No comments
Thank you for your comments