டிஎன்பிஎஸ்சி திருத்தியமைக்கப்பட்ட 2024-ம் ஆண்டிற்கான தேர்வுகால அட்டவணை வெளியீடு!
சென்னை:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் திருத்தியமைக்கப்பட்ட 2024ஆம் ஆண்டிற்கான தேர்வுகால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2024ஆம் ஆண்டில் நடத்தப்பட உள்ள தேர்வுகளின் மூலம் 9,883 பணியிடங்களை நிரப்புவதற்கு போட்டித் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திருத்தி அமைக்கப்பட்ட ஆண்டு திட்டத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, குருப் டி பணியில் 6,244 பேரும், குருப் 1 பணியில் 90 பேரும், குருப் 1 பி மற்றும் சி பிரிவில் 29 பணியிடங்களும் நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில், குருப் 4 பணியிடங்களுக்கு ஜூன் 9ஆம் தேதி போட்டி எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. குருப் 1 பணிக்கான முதல்நிலைத் தேர்வு ஜூலை 13ஆம் தேதியும், குருப் 1 பி மற்றும் சி பிரிவிற்கான முதல்நிலைத் தேர்வு ஜூலை 12ஆம் தேதியும் நடைபெறுகிறது.
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் பணியில் 105 இடங்களை நிரப்புவதற்கு மே 15ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் 11ஆம் தேதி தேர்வு நடத்தப்பட உள்ளது.
குருப் 2 நேர்முகத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பணிகளில் 2,030 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஜூன் 28ஆம் தேதி வெளியிடப்பட்டு, முதல்நிலைப் போட்டித்தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளில் நேர்முகம் இல்லாத பணிகளில் 605 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஜூலை 26ஆம் தேதி வெளியிடப்பட்டு, அக்டோபர் 10ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது. ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளில் டிப்ளமோ, ஐடிஐ நிலையில் 730 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியிடப்பட்டு, நவம்பர் 17ஆம் தேதி தேர்வு நடத்தப்பட உள்ளது.
மேலும், அரசு வழக்கறிஞர் நிலை பணியில் 50 பேர் நியமிக்க செப்டம்பர் 13ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு, டிசம்பர் 14ஆம் தேதி போட்டி எழுத்துத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click here to TNPSC_Annual Planner_Revised
No comments
Thank you for your comments