Breaking News

மணிப்பூரில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு

இம்பால், ஏப்.25-

மணிப்பூர் மாநிலம் காங்போகி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த சில நாட்களுக்கு பின்பு, மாவட்டத்தின் சபர்மீனாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 2-ல் உள்ள பாலத்தில் நேற்று (ஏப்.24) அதிகாலை சுமார் 1 மணிக்கு மூன்று இடங்களில் வெடிகுண்டு வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


மணிப்பூரின் வெளிப்புறத் தொகுதிகளுக்கு ஏப்.26-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன. 

இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், 

“வெடிகுண்டு சம்பவம் ஏப்.24-ம் தேதி அதிகாலை 1.15 மணிக்கு நடந்துள்ளது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், இம்பால் பள்ளத்தாக்குக்கு அத்தியாவசிய பொருள்கள் கொண்டு செல்லும் முக்கியமான சாலை பாதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த இடம் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்தச் சம்பவத்துக்கு இதுவரை யாரும் பொறுபேற்கவில்லை. சிறிய வாகனங்கள் குண்டுவெடிப்பு நடந்த இடத்தை தவிர்த்து விலகிச் செல்லலாம்" என்று தெரிவித்தனர்.

முதல்கட்ட வாக்குப்பதிவில் நடந்த வன்முறைகள் 

மக்களவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதிலுமுள்ள 102 தொகுதிகளில் ஏப்.19ம் தேதி நடந்தது. மணிப்பூரின் உள்புற தொகுதிகளிலும் மற்றும் வெளிப்புற தொகுதிகளின் சில பகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. 

அப்போது சில இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவமும், வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கைப்பற்றும் சம்பவமும் நிகழ்ந்தன. இதனால், அங்குள்ள 11 வாக்குச்சாவடிகளுக்கு ஏப்.22ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.

கடந்த மே மாதம் மணிப்பூரில் மைத்தேயி மக்களுக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே வெடித்த இனக்கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தில் சுமார் 220 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக் கானோர் காயமடைந்தனர். 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் மாநிலத்துக்குள்ளேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். 

இந்தப் பின்னணியில் கலவரம் நடந்து ஒரு ஆண்டுக்கு பின்னர் மாநிலம் மக்களவைத் தேர்தலைச் சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments