Breaking News

அரசு ஆணை கிடைத்தும் பணியில் சேர முடியவில்லை - கூட்டுறவுத்துறைக்கு தேர்வானவர்கள் புலம்பல்

காஞ்சிபுரம், மார்ச்.5:

அரசின் பணி நியமன ஆணை கிடைத்தும் பணியில் சேர முடியவில்லை என கூட்டுறவுத்துறையில் காலியாகவுள்ள வங்கிப் பணியிடங்களுக்கு தேர்வானவர்கள் ஆட்சியர் மற்றும் இணைப்பதிவாளரை சந்தித்து செவ்வாய்க்கிழமை புகார் தெரிவித்துள்ளனர்.


காஞ்சிபுரம் மாவட்டக் கூட்டுறவுத்துறையில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு அதன் பின்னர் அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்காணலும் நடத்தப்பட்டு தேர்வானவர்களுக்கு கடந்த 1.2.2024 ஆம் தேதி அரசின் பணி நியமன ஆணை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அவர்களால் வழங்கப்பட்டது.

இதில் பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கிக்கு தேர்வானவர்கள் 8 பேர் பணி நியமன ஆணைகளுடன் பணியில் சேரச் சென்ற போது அவர்களை பணியில் சேர அனுமதிக்கப்படவில்லை.

இது குறித்து பாதிக்கப்பட்ட 8 பேரும் அவரவர்களது பெற்றோர்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் கூட்டுறவுச்சங்கங்களுக்கான இணைப்பதிவாளர் ஆகியோரை சந்தித்து புகார் தெரிவித்தனர்.

அப்புகார் மனுவில் பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியின் செயலாட்சியராக செயல்படும் மு.உமாதேவி என்பவர் எக்காரணமும் இல்லாமல்பணியில் சேர விடாமல் தடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து கூட்டுறவுச்சங்கங் களுக்கான இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ கூறியதாவது:

பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கிக்கு தேர்வு செய்யப்பட்ட 8 பேரும் இதற்கென நியமிக்கப்பட்ட குழுவால் முறையாக எழுத்துத்தேர்விலும், நேர்காணலிலும் தேர்ச்சி பெற்றவர்கள்.

அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணையை ரத்து செய்யவே முடியாது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தி அவர்கள் 8 பேரையும் விரைவாக பணியில் சேர்த்துக் கொள்ள உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பணி நியமன ஆணை பெற்றவர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


No comments

Thank you for your comments