காஞ்சிபுரம் நகைக்கடை அதிபர் வீட்டில் ரூ.35லட்சம் மதிப்பு நகைகள் திருட்டு
காஞ்சிபுரம், மார்ச் 4:
காஞ்சிபுரம் நகர் சின்னக்காஞ்சிபுரம் பகுதியில் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் மகாவீர் சந்த் என்பவரது நகைக்கடை உள்ளது.தரைத்தளத்தில் நகைக்கடையும்,முதல் தளத்தில் அவரது வீடும் அமைந்துள்ளது.
மகாவீர் சந்த் சென்னையில் நடைபெறும் திருமணத்தில் பங்கேற்பதற்காக தனது குடும்பத்தினருடன் வீடு,கடை ஆகியனவற்றை பூட்டி விட்டு சென்றுள்ளார்.3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திரும்பி வந்து பார்த்த போது வீட்டிலிருந்த 1453 கிராம் தங்கம், ரொக்கம் ரூ.ஒரு லட்சம் ஆகியனவற்றை மர்மநபர்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.இதன் மொத்த மதிப்பு ரூ.35லட்சம்.தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்துள்ளனர்.
காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு நேரத்தில் வீட்டின் பால்கனி வழியாக மர்ம நபர்கள் உள்ளே சென்று திருடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கடையின் உரிமையாளர் மகாவீர் சந்த் கொடுத்த புகாரின் பேரில் விஷ்ணுகாஞ்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
No comments
Thank you for your comments