Breaking News

இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் 2.24 லட்சம் பேர் உயிர் பிழைத்திருக்கின்றர் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

காஞ்சிபுரம், மார்ச் 3:

இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் இதுவரை 2.24லட்சம் பேருக்கு அவசர மருத்துவ உதவி செய்யப்பட்டு உயிர் பிழைத்திருப்பதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரத்தில் பேசினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்றது. உத்தரமேரூர் எம்எல்ஏவும்,மாவட்ட செயலாளருமான க.சுந்தர் கூட்டத்துக்கு தலைமை வகித்தார்.

எம்எல்ஏ எழிலரசன், மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ்,மாவட்டப் பொருளாளர் சன்பிராண்ட் ஆறுமுகம்,மாவட்டதுணைச் செயலாளர் வ.ஜெகன்னாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநகர செயலாளர் சிகேவி தமிழ்ச்செல்வன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு வாய்பேசாத,காது கேளாத 30 மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கிய பின்னர் பேசியதாவது:

இன்னுயிர் காப்போம் திட்டம் செங்கல்பட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழகத்தில் 500 இடங்களில் விபத்துகள் அதிகமாக நடக்கும் என்பதை கண்டறிந்து அவற்றுக்கு அருகாமையில் உள்ள 642 மருத்துவமனைகளில் பாதிக்கப்படும் மக்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. 

இதுவரை இத்திட்டத்தில் மட்டும் விபத்தில் பாதிக்கப்பட்ட 2.25லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இவர்களுக்கு மொத்தம் ரூ.196 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ரூ.ஒரு லட்சமாக வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை தற்போது ரூ.2லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

மருத்துவர்கள் வீடு தேடிச் சென்று மருத்துவம் பார்க்கும் திட்டம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. இத்திட்டத்தின் மூலம் 1.70 கோடி பேர் பயனடைந்துள்ளனர்.தற்போது இத்திட்டம் தொழிலாளர்களுக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது.

அறநிலையத்துறையால் 33 மாதங்களில் 1461 கோயில்களில் கும்பாபிஷேகம் செய்திருப்பது, ரூ.6725 கோடி மதிப்புள்ள 6442 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டிருப்பது,1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த 197 கோயில்கள் பழமை மாறாமல் ரூ.304.85 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டிருப்பது, ஒரு ஜோடிக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் சீர்வரிசைப் பொருட்கள் வழங்கியதோடு மொத்தம் 11 ஆயிரம் திருமணங்களை நடத்தியிருப்பது, 17 ஆயிரம் அர்ச்சகர்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கியிருப்பது இப்படியாக திமுக அரசின் சாதனைகளை பட்டியிலிட்டுக் கொண்டே போகலாம்.

மதுரையில் ரூ.216 கோடியில் நூலகம் மற்றும் ஜல்லிக்கட்டுக்கென ஏறு தழுவுதல் அரங்கம் ஆகியன அமைத்திருப்பது போன்ற எந்த மாநிலமும் செய்யாத பல சாதனைகளால் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக போட்டியிடும் அத்தனை கட்சிகளும் கண்டிப்பாக டெப்பாசிட் இழக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் பேசினார்.  கூட்டத்தில் பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள்,பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.




படவிளக்கம்: பொதுக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவருக்கு சீருடை வழங்கிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

No comments

Thank you for your comments