பிரதமர் வீட்டை முற்றுகையிட ஆம் ஆத்மி கட்சியினர் முயற்சி - 144 தடை உத்தரவு... போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
புதுடெல்லி, மார்ச் 27-
கெஜ்ரிவால் கைது
மதுபான கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது. இதனைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேரணி
கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணிக் கட்சிகள் மகா பேரணி என்ற பெயரில் கண்டன ஆர்ப்பாட்ட பேரணியை டெல்லி ராம்லீலா மைதானத்தில் வரும் மார்ச் 31-ம் தேதி நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முற்றுகை போராட்டம்
இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆம் ஆத்மி கட்சியினர் பிரதமர் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்பையும் மீறி, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற அக்கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
144 தடை உத்தரவு
இந்தக் கைது நடவடிக்கைக்கு முன்னதாக, “படேல் சவுக் மெட்ரோ நிலையத்துக்கு முன்பாக போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. எனவே அனைவரும் கலைந்து செல்லுங்கள்” என டெல்லி போலீஸார் எச்சரித்திருந்தனர்.
கெஜ்ரிவால் மனைவி வீடியோ வெளியீடு
முன்னதாக வீடியோவை வெளியிட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி, “சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்” என கெஜ்ரிவால் கூறியதாக தெரிவித்திருந்தார். அதாவது, “சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன். எந்த சிறையும் என்னை நிரந்தரமாக அடைத்து வைத்திருக்க முடியாது. சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன். நான் கடுமையான நெருக்கடிகளை சந்தித்திருக்கிறேன், இந்த கைது என்னை ஆச்சரியப்படுத்தவில்லை” என கெஜ்ரிவால் கூறியதாக வீடியோவில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக ஆர்ப்பாட்டம்
இதனிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து பாஜக தலைவர் மன்ஜிந்தர் சிங் சிர்சா கூறுகையில், “அவர்கள் மதுபான ஊழல் வழக்கை திசை திருப்ப நினைக்கிறார்கள். சிறைக்குள் இருந்து தொடர்ந்து உத்தரவுகள் வருவதாகக் கூறுகிறார்கள். அமலாக்கத் துறையின் காவலில் இருந்து கெண்டு கெஜ்ரிவால் நாடகமாடுகிறார்.
அவர்கள் தயாரித்த போலி கடிதம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி துணைநிலை ஆளுநர் மற்றும் அமலாக்கத் துறை இயக்குநருக்கு எழுத்து பூர்வமாக புகார் அளித்துள்ளேன். கேங்ஸ்டர் மற்றும் குண்டர்கள் சிறையில் இருந்து கொண்டு தங்கள் குழுக்களை நடத்துவது போல டெல்லி அரசை நடத்த அவர்கள் (ஆம் ஆத்மி கட்சி) நினைக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற ஊழல்வாதிகள் முதல்வராக தொடரக்கூடாது. அவர் பதவி விலக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
கைது பின்னணி
கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்பதுதான் புகார். இந்த குற்றச்சாட்டில், மது விற்பனை செய்ய லைசன்ஸ் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விதிகள், செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த முறைகேடுகள் குறித்து அரசின் தலைமை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஆளுநர் சக்சேனா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கேட்டு கொண்டார். அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார். மறுபுறம் அமலாக்கத்துறையும் சட்டவிரோத பண பரிமாற்றம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. தொடர்ச்சியாக சம்மன் அனுப்பப்பட்டு அதன் பின்னர்தான் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.



No comments
Thank you for your comments