வேளாண் வளர்ச்சி பணிகளை கலெக்டர் கலைசெல்வி மோகன் நேரில் ஆய்வு
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், பெருநகரில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.8,000/- மானிய விலையில் நெகிழி மூடிக்கு மற்றும் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தில் ரூ.8,000/- மானிய விலையில் மிளகாய் நாற்றுகள் தோட்டக்கலை துறையின் மூலம் வழங்கப்பட்டதையும், மற்றும் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் 100 சதவீத மானியத்தில் மணிலா/உளுந்து பயிர் செய்ய தெளிப்புநீர் பாசன முறையில் பயிரிடப்பட்டுள்ள விவசாய பயிரினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, KAVIADP 2022-23ம் ஆண்ட 1 ஹெக்டர் பரப்பில் மல்லி சாகுபடி செய்யும் பொருட்டு ரூ.18,000/- மானிய விலையில் மல்லி நாற்று மற்றும் இடுபொருட்கள் வழங்கியுள்ளதையும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 6 ஏக்கர் பரப்பளவில் 13 விவசாயிகளுடன் தரிசு நில தொகுப்பில் ரூ.13.77 மதிப்பீட்டில் திறந்தவெளி கிணறு அமைக்கப்பட்டதையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, அத்தொகுப்பில் சொட்டு நீர் பாசனம் அமைத்து விரைவில் தரிசு நிலத்தை சாகுபடிக்கு கொண்டு வர மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் அறிவுரை வழங்கப்பட்டது.
தொடர்ந்து இராவுத்தநல்லூர் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தினையும், நியாயவிலை கடையினையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, காரணை ஊராட்சியில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் செயல்பட்டு வரும் மரச்செக்கினை பார்வையிட்டு, வேடப்பாளையத்திலுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து நெல் வரத்தை அதிகரிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவு: தமிழ்நாட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல், நிலக்கடலை, உளுந்து, தேங்காய், எள் போன்ற வேளாண் உற்பத்தி பொருட்கள் நல்ல விலைக்கு மறைமுக ஏலம் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம், இடைத்தரகர்கள் தலையீடு தவிர்க்கப்பட்டு தரத்திற்கு ஏற்ப விலை விவசாயிகளுக்கு கிடைக்கிறது. இதன் அடுத்த கட்டமாக இ -நாம் எனும் மின்னணு வேளாண் சந்தை மூலம் ஒரு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வரப்படும் விளைபொருட்களின் ஈரப்பதம், கலப்பு, தரம் ஆகியவை கண்டறியப்பட்டு வலைதளம் மூலம் பதிவேற்றப்படுகிறது இதன் மூலம் எந்த ஒரு வர்த்தகரும் ஏலத்தில் கலந்து கொண்டு நல்ல விலை விவசாயிகளுக்கு வழங்கிட ஏதுவாகிறது.
இதன் ஒரு பகுதியாக வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை காஞ்சிபுரம் மாவட்டத்தின் கீழ் இயங்கும் உத்திரமேரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது இ-நாம் திட்ட செயல்பாடுகள், நெல் வரத்து மற்றும் இதர பணிகளை நேரடியாக ஆய்வு செய்தார். மேலும் நெல் விற்பனைக்காக கொண்டு வந்துள்ள விவசாயிகளிடம் உற்பத்தி செலவு, மகசூல், கிடைக்கும் விலை விவரம், விவசாயத்தில் உள்ள இடர்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
தற்போது உத்திரமேரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 1898 மெட்ரிக் டன் அளவு கொள்முதல் செய்யப்பட்டு 945 விவசாயிகளுக்கு ரூ.3.41 கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. திணையாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த திரு.ஆறுமுகம் என்ற விவசாயி மாவட்ட ஆட்சித்தலைவர் இடத்தில் கூறும் போது ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலமாக சரியான எடை, நிறைவான சேவை, எந்த கமிஷனும் இல்லாத நிலையில் விரைந்து பண பட்டுவாடா ஆகியவை மன நிறைவைத் தருவதாக கூறினார். மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர் தொடர்ந்து அனைத்து கிராமங்களிலும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் பயனடைய கேட்டுக் கொண்டார். மேலும் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 6.90 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 5000 மெட்ரிக் டன் சேமிப்பு கிட்டங்கிகளை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
உத்திரமேரூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மதிப்புக்கூட்டப்பட்ட எண்ணெய் உற்பத்தி செய்யும் மையம் மற்றும் நடவு மற்றும் விதை கரனை திட்டத்தில் வழங்கப்பட்ட ரூ. 60 லட்சம் மதிப்பிலான விதை சுத்திகரிப்பு நிலையம், ரூ. 12.5 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்ட சோலார் குளிரூட்டும் நிலையம், உழவர் உற்பத்தியாளர் விற்பனை மையம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்து உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குநர்களுடன் வேளாண் வணிகம் குறித்து கலந்துரையாடினார். வணிக பரிவர்த்தனை இரட்டிப்பாக்க ஆன்லைன் வர்த்தகம் மூலம் விற்பனை வாய்ப்புகளை மேம்படுத்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
இவ் ஆய்வின் போது மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முனைவர். பிரின்ஸ் கிளமன்ட், துணை இயக்குனர் (வேளாண்மை) திரு.R.ராஜ்குமார், வேளாண்மை துணை இயக்குனர் (பொ) திரு.R.சீனிராஜ் வேளாண்மை உதவி இயக்குனர்கள் திரு. சரவணன், திருமதி. முத்துலட்சுமி, வேளாண்மை அலுவலர்கள் திருமதி.விஜயலட்சுமி, தீபா, பிரபாகர், உத்திரமேரூர் ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் திரு.ஏ.யுவராஜ், உதவி வேளாண்மை அலுவலர் திரு.கொளஞ்சி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments