லஞ்சம் வாங்கிய மின் வாரிய உதவி பொறியாளர் கைது
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் வணிக மின் இணைப்பில் இருந்து வீட்டு மின் இணைப்பாக மாற்ற ரூ.3,000/- லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவியாளரை திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
அம்பத்தூர் அடுத்த ஆவடி, கோயில்பதாகை, பழைய அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்த சுலோச்சனா (62). இவரது சகோதரர் ஜெயபாலனின் வணிக மின் இணைப்பில் இருந்து வீட்டு மின் இணைப்பாக மாற்றுவதற்காக விண்ணப்பத்தை கோவில்பதாகை மின்சார வாரியத்தில் கடந்த வாரம் விண்ணப்பித்து இருந்தார். இப்பணியை சுலேச்சனா மேற்கொண்டு வந்துள்ளார்.
இதனை ஆய்வு செய்த கோயில்பதாகை மின்சாரத்துறை வணிக உதவியாளரான திருவள்ளூர், ராஜாஜிபுரத்தைச் சேர்ந்த மரியதாஸ் (39)(படம்) வணிக மின் இணைப்பில் இருந்து வீட்டு மின் இணைப்பாக மாற்றுவதற்காக ரூ.3,000/- லஞ்சம் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
இதையடுத்து, சுலோச்சனா லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாததால் திருவள்ளூர் லஞ்சம் ஒழிப்பு போலீஸாரை அணுகி நடந்ததை விளக்கமாக கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து போலீஸார் அறிவுரையின் பேரில் செவ்வாய்க்கிழமை அவர் மின்சார வாரிய அலுவலகத்திற்கு மின் இணைப்பை மாற்றுவதற்காக ரூ.3,000/- லஞ்சம் கொடுக்க சென்றுள்ளார்.
அப்போது, அவர் மரியதாஸிடம் லஞ்சப் பணத்தை கொடுத்த போது, லஞ்ச ஒழிப்பு துறை காவல் ஆய்வாளர் மாலா, உதவி ஆய்வாளர் தமிழ்செல்வி ஆகியோர் தலைமையில் போலீஸார் மரியதாஸை கைது செய்தனர்.
உங்கள் நிருபர்
ஜெ.பிரேம்குமார்
No comments
Thank you for your comments