Breaking News

காஞ்சிபுரம் பாண்டவ தூதப்பெருமாள் கோயில் மகா சம்ப்ரோஷணம்

காஞ்சிபுரம், பிப்.15:

காஞ்சிபுரத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ருக்மணிதேவி சமேத பாண்டவ தூதப் பெருமாள் கோயில் மகா சம்ப்ரோஷணம் வியாழக்கிழமை நடைபெற்றது.

படவிளக்கம்  : காஞ்சிபுரம் பாண்டவ தூதப்பெருமாள் கோயில் ராஜகோபுரத்தில் நடைபெற்ற மகா சம்ப்ரோஷணம்

கிருஷ்ண பரமாத்மா பாண்டவ சகோதர்களின் தூதுவராக துரியோதனனின் அரசவைக்கு சென்றதால் இத்திருக்கோயில் மூலவர் பாண்டவ தூதப் பெருமாளாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோயில் மூலவர் 25 அடி உயரத்தில் விஸ்வ ரூப காட்சியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இக்கோயில் மகா சம்ப்ரோஷணம் இதற்கு முன்பு கடந்த 10.2.1989 ஆம் தேதி நடைபெற்றது.இதனையடுத்து ஜெய ஹனுமான் சேவா டிரஸ்ட் அமைப்பின் முழுபங்களிப்புடன் கோயில் ராஜகோபுரம், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரம் உட்பட கோயில் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டு மகா சம்ப்ரோஷணம் நடைபெற்றது.

மகா சம்ப்ரோஷணத்தையொட்டி ஆலய வளாகத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் இம்மாதம் 12 ஆம் தேதி திங்கள்கிழமை பக்வத் அனுக்கை பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.

இதன் தொடர்ச்சியாக 15 ஆம் தேதி வியாழக்கிழமை மகா பூரணாகுதி தீபாராதனை நிறைவு பெற்று புனித நீர்க்குடங்கள் யாகசாலையிலிருந்து பட்டாச்சாரியார்களால் மங்கல மேள வாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

ஊர்வலத்தின் போது ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவர் பாண்டவ தூதப்பெருமாள் மற்றும் ருக்மணி தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் உடன் வந்தனர்.வாண வேடிக்கைகளும் நடைபெற்றன. புனித நீர்க்குடங்கள் கோபுரத்தை அடைந்ததும் மகா சம்ப்ரோஷணம் நடைபெற்றது.

விழாவில் அறநிலையத்துறை காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் ரா.வான்மதி, உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி,அறநிலையத்துறை செயல் அலுவலர் ந.தியாகராஜன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

ஏற்பாடுகளை திருக்கோயில் பரம்பரை அறங்காவலர்களான சம்பத்குமாராச்சாரியார், ரங்காச்சாரியார், ராமானுஜாச் சாரியார் ஆகியோர் செய்திருந்தனர்.இரவு பெருமாள் திருவீதி உலாவும் நடைபெற்றது.


No comments

Thank you for your comments