கோவில்களில் வழிபாடு செய்ய ஒவ்வொரு இந்துக்கும் உரிமை உண்டு - காஞ்சிபுரத்தில் நிர்மலா சீதாராமன் பேட்டி
காஞ்சீபுரம், ஜன.22:
காஞ்சீபுரத்தில் உள்ள சிறப்பு பெற்ற காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு ராமபஜனை, வழிபாட்டுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
இதுகுறித்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அயோத்தியில் ராமர்கோவில் கும்பாபிஷேகத்தால் மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். தமிழகத்தில் கோவில்களை தி.மு.க. அரசு தவறாக பயன்படுத்துகிறது.இந்துக்களின் வழிபாட்டு உரிமையில் தி.மு.க.அரசு தலையிடுகிறது.
பிரதமர் பங்கேற்கும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை மக்கள் அனைவரும் பார்க்க விரும்புவார்கள். பிரதமர் மீதான தனிப்பட்ட வெறுப்பை காரணம் காட்டி பக்தர்களை வஞ்சிக்கிறார்கள். கோவிலில் வழிபட ஒவ்வொரு இந்துவுக்கும் உரிமை உண்டு.
இந்துக்கள் உரிமையும், எனது உரிமையும் பறிக்கப்படுகிறது. தி.மு.க. அரசு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
காமாட்சி அம்மன் கோவிலில் எல்.இ.டி. திரை அகற்றப்பட்டது தொடர்பாக மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சண்முகம் கூறும்போது, காமாட்சி அம்மன்கோவிலில் பஜனை மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்த அனுமதி பெறப்பட்டது.
கும்பாபிஷேக நிகழ்ச்சியை திரைகள் அமைத்து நேரடி ஒளிபரப்பு செய்யமாட்டோம் என்று கடிதம் கொடுத்து இருந்தனர். கோவிலில் பஜனை, அன்னதானம், சிறப்பு வழிபாடு நடத்த எந்த தடையும் இல்லை என்றார்.
நிகழ்ச்சியில் புதியநீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பா.ஜனதா மாவட்ட தலைவர் பாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


No comments
Thank you for your comments