காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் கனு உற்சவம் நிறைவு
காஞ்சிபுரம், ஜன.16:
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கனு உற்சவம் நிகழ் மாதம் 10 ஆம் தேதி 16 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்றது. கனு உற்சவ நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் மற்றும் கோ பூஜை ஆகியன நடைபெற்றன.
இதன் நிறைவு நாளையொட்டி லட்சுமி,சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி அம்மன் கேடயத்தில் அலங்காரமாகி சுக்ரவார மண்டபத்துக்கு எழுந்தருளினர்.
பின்னர் சந்நிதி தெருவில் உள்ள அலங்கார மண்டபம் வரை எழுந்தருளினார்.அம்மனுடன் பசுவும்,கன்றும் அலங்கரிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டு ஆலயம் திரும்பியது.
இதன் தொடர்ச்சியாக அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள கனு மண்டபத்துக்கு எழுந்தருளினார். அங்கு ஆண்டுக்கு ஒரு நாள் மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்காக உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
இந்த அபிஷேக நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் கனு மண்டபத்தின் முன்பாக அமர்ந்து பார்வையிட்டனர். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்ற பின்னர் அம்மன் சந்நிதி திரும்பினார்.
ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயர் தலைமையில் கோயில் ஸ்தானீகர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

No comments
Thank you for your comments