கணவர் மீது காரை ஏற்றி கொடூரமாக கொன்ற மனைவி - வாலிபருடன் திருமணத்துக்கு தடையாக இருந்ததால் தீர்த்து கட்டிய பயங்கரம்
சென்னை :
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது :-
வியாபாரி
சென்னை அயனாவரம் பெரியாா் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்த பழைய பேப்பா் கடை உரிமையாளா் ஜா.பிரேம்குமாா் (வயது 37). இவரது மனைவி சன்பிரியா.
கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை பிரேம்குமாா் தனது மோட்டாா் சைக்கிளில் அண்ணாநகா் நியூஆவடி சாலையில் செல்லும்போது, பின்னால் வந்த காா் மோதியதில் இறந்தாா்.
பிரேம்குமாா் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரி சங்கீதா, காவல் துறையில் புகாா் செய்ததன் அடிப்படையில் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி போலீஸாா் ஆய்வு செய்தனா்.
கொலை அம்பலம்
இதில், விபத்தை ஏற்படுத்திய காரில் வந்த ஒரு நபரும், மோட்டாா் சைக்கிளில் வந்த ஒரு நபரும் பிரேம்குமாா் இறந்துவிட்டாரா? என்பதை உறுதி செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் பிரேம்குமாரின் மனைவி சன்பிரியாவிடம் (35) போலீஸாா் விசாரணை செய்தனா். இதில், சன்பிரியா, அயனாவரம் செட்டி தெருவைச் சோ்ந்த ரா.ஹரிகிருஷ்ணன் (30) என்பவருடன் சோ்ந்து அயனாவரம் பழனி ஆண்டவா் கோவில் தெருவைச் சோ்ந்த சரத்குமாா் (27) என்பவா் மூலம் பிரேம்குமாா் மீது காரை ஏற்றி கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, சன்பிரியாவையும், ஹரிகிருஷ்ணனையும் போலீஸாா் கைது செய்தனா். சரத்குமாரை தேடி வருகின்றனா்.
பழக்கம்
இது தொடா்பாக போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
பிரேம்குமாருக்கும், சன்பிரியாவுக்கும் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகின்றன. இந்த தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனா்.
பிரேம்குமாரின் வீட்டின் அருகே 7 மாதங்களுக்கு முன்பு ஹரிகிருஷ்ணன் குடி வந்துள்ளாா். அப்போது சன்பிரியாவுக்கும், ஹரிகிருஷ்ணனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
திருமணம் செய்ய முடிவு
இந்தநிலையில் சமீபத்தில் ஹரிகிருஷ்ணனும், பிரியாவும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனா். தங்களது திருமணத்துக்கு தடையாக இருக்கும் பிரேம்குமாரை காா் ஏற்றி கொலை செய்ய திட்டமிட்டு , அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் காா் ஓட்டுநராக இருக்கும் சரத்குமாரை அணுகினா்.
அவா் பிரேம்குமாரை கொலை செய்ய ரூ.5 லட்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் பணத்தை வழங்க சம்மதித்தனா். திட்டமிட்டபடி பிரேம்குமாரை காரை ஏற்றி சரத்குமாா் கொலை செய்துள்ளாா்.
அப்போது காரை பின் தொடா்ந்து வந்த ஹரிகிருஷ்ணனின் மோட்டாா் சைக்கிளில் சரத்குமாா் அங்கிருந்து தப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இணையதளம் மூலம் காா் வாங்கிய மனைவி
வியாபாரி பிரேம்குமாரை கொலை செய்ய அவா் மனைவி சன்பிரியாவும், ஹரிகிருஷ்ணனும் பழைய பொருட்களை வாங்கி, விற்கும் இணையதளம் மூலம் காா் வாங்கியுள்ளனா்.
இணையத்தில் நீண்ட தேடுதலுக்குப் பின்னா் ஒரு காரை ரூ.1 லட்சத்துக்கு வாங்கியுள்ளனா். ஆனால், அந்த காரின் உரிமையாளா் பெயரை மாற்றாமல் வைத்து இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கணவரை காரை ஏற்றி மனைவி கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments
Thank you for your comments