காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் - அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு
காஞ்சிபுரம், ஜன.30:
படவிளக்கம் : கும்பாபிஷேகத்தையொட்டி கச்சபேசுவரர் கோயிலில் யாகசாலை பூஜையில் அருள்பாலிக்கும் கச்சபேசுவரர் சுவாமி
திருமால் ஆமை(கச்சம்) வடிவில் சிவனை வழிபட்டது உட்பட பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளை உடையது காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேசுவரர் திருக்கோயில்.
இத்திருக்கோயில் மகா கும்பாபிஷேகப் பெருவிழா நிகழ் மாதம் 28 ஆம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது.
மறுநாள் 29 ஆம் தேதி கோ.பூஜை,கஜபூஜை ஆகியனவும் நடைபெற்றது. 30 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை யாகசாலையில் பூஜைகள் நடத்தும் 160 சிவாச்சாரியார்கள் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து ஆலயத்துக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலயத்தில் கும்பாபிஷேக பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார்.
அமைச்சருக்கு கோயில் திருப்பணிக்குழுவின் தலைவர் எம்.பெருமாள்,செயலாளர் கே.சுப்பராயன், செங்குந்த மகஜான சங்க தலைவர் எம்.சிவகுரு ஆகியோர் கோயிலில் புதியதாக செய்யப்பட்டுள்ள திருப்பணிகள் பற்றிய விபரங்களை விளக்கிக் கூறினார்கள்.
பின்னர் யாகசாலை பூஜையில் நடைபெறும் வழிபாட்டில் கலந்து கொண்டார். ஆலய நிர்வாகிகள் சார்பில் அமைச்சருக்கு மரியாதையும், கோயில் பிரசாதமும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாளை வியாழக்கிழமை காலையில் மகாபூர்ணாகுதி தீபாராதனைகள் நிறைவு பெற்று புனித நீர்க்குடங்கள் ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு காலை 9.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
கும்பாபிஷேகத்தையொட்டி ஆலயம் முழுவதும் வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினரும், செங்குந்த மகாஜன சங்கத்தினரும் செய்து வருகின்றனர்.

No comments
Thank you for your comments