கேலோ இந்தியா : சாம்பியன் உருவாக்கும் பூமி தமிழ்நாடு - பிரதமர் மோடி பெருமிதம்
சென்னை, ஜன.19-
விளையாட்டு துறைக்கு சிறப்பான தொடக்கமாக அமைந்துள்ளது , சாம்பியன்கள் உருவாக்கும் பூமியாக தமிழ்நாடு உள்ளது என பிரதமர் பேசினார்.
விளையாட்டு போட்டி
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் வரும் 31-ந் தேதி வரை சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் நடைபெற விருக்கின்றன.
இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று (19-01-2024) நடைபெற்றது. பிரதமர் மோடி விழாவை தொடக்கி வைத்தார். விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் முன்னிலை வகித்தனர்.
மத்திய இளைஞா் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா், மத்திய இணையமைச்சா் நிசித் பிரமாணிக், தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனர்.
விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-
2024-ம் ஆண்டில் விளையாட்டுத் துறைக்கு சிறப்பான தொடக்கமாக கேலோ இந்தியா விளையாட்டு அமைந்துள்ளது. தமிழ்மொழி மற்றும் தமிழ்நாட்டின் கலாசாரம் சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வை தரும்.
தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை காண ஆர்வமாக இருக்கிறேன். சென்னைக்கு வந்தது சொந்த ஊருக்கு வந்ததுபோல இருக்கிறது. விளையாட்டுத்துறையில் சாம்பியன்களை உருவாக்கும் பூமியாக தமிழ்நாடு திகழ்கிறது. விளையாட்டில் சாதனை படைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, வணக்கம் சென்னை எனக் கூறி தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி, அருமை உடைத்தென்று அசவாமை வேண்டும், பெருமை முயற்சி தரும் என்ற திருக்குறளையும் மேற்கோள்காட்டினார்.



No comments
Thank you for your comments