காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயிலில் பிப்.1-ல் மகா கும்பாபிஷேகம்- 63 யாக குண்டங்களில் 160 சிவாச்சாரியார்கள் பங்கேற்பு
காஞ்சிபுரம், ஜன.23:
காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி மாதம் முதல் தேதி தொடங்கவுள்ளது.
இது குறித்து கோயில் திருப்பணிக்குழுவின் தலைவர் எஸ்.பெருமாள்,செயலாளர் கே.சுப்பராயன், செங்குந்த மகாஜன சங்க தலைவர் எம்.சிவகுரு உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
திருமால் ஆமை(கச்சம்)வடிவில் சிவனை வழிபட்டதால் இத்தலம் கச்சபேசுவரர் திருக்கோயில் எனப் பெயராயிற்று. திருமால், பிரம்மன்,சூரியன், விநாயகர், பைரவர் உள்ளிட்ட தெய்வங்கள் சிவபெருமானை வழிபட்ட பெருமைக்குரிய கோயில்.மூலவர் கச்சபேசுவரர் சுயம்பு வடிவில் அருள்பாலிக்கிறார்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இத்திருக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி கோயில் வளாகத்தில் பிரம்மாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டு வருகிறது.
படவிளக்கம்: கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி ஆலய வளாகத்தில் அழகுடன் வடிவமைக்கப்பட்டுள்ள யாகசாலை மண்டபம்
இதில் 4 நவ குண்டங்கள், 30 யாகசாலைகளில் 63யாக குண்டங்களில் 160 சிவாச்சாரியார்கள் கோயில் பூஜகர் கே.வி.சுப்பிரமணிய குருக்கள் மற்றும் இஷ்டசித்தி. ஏ.பிரபாகர் குழுக்கள் தலைமையில் பங்கேற்கவுள்ளனர்.
வரும் 28 ஆம் தேதி பாலாற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்வும்,பணாமுடீஸ்வரர் ஆலயத்திலிருந்து சிவாச்சாரியார்கள் அனைவரையும் ஊர்வலமாக அழைத்து வரும் நிகழ்வும் நடைபெறுகிறது.
மறுநாள் திங்கள்கிழமை யாகசாலை பூஜைகள் கோ.பூஜை,கஜபூஜையுடன் தொடங்குகின்றன. 31-ம் தேதி ஏகாம்பரநாதர் ஆலயத்திலிருந்து சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக கச்சபேசுவரர் ஆலயத்துக்கு மங்கள மேள வாத்தியங்களுடன் அழைத்து வரப்படுகின்றனர்.
பிப்.1 ஆம் தேதி காலை 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனையடுத்து மூலவர் சிறப்பு அபிஷேகம், மாலையில் திருக்கல்யாண உற்சவம், பின்னர் சுவாமி அம்மன் திருக்கல்யாண திருக்கோலத்தில் வீதியுலா வரும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
பொதுமக்கள் கும்பாபிஷேக நிகழ்வில் தவறாது கலந்து கொள்ளுமாறும் கோயில் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர்.
.jpg)


No comments
Thank you for your comments