Breaking News

காஞ்சிபுரத்தில் எயிட்ஸ் விழிப்புணர்வு பேரணி, கையெழுத்து இயக்கத்தை ஆட்சியர் தொடக்கி வைத்தார்

காஞ்சிபுரம்,டிச.1:

காஞ்சிபுரத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடக்கி வைத்ததுடன் கையெழுத்து இயக்கத்தையும் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.


உலகம் முழுவதும் டிசம்பர் முதல் தேதியை உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.இதனையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.இப்பேரணியில் காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆந்திரசன் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவியர்கள் பலரும் கலந்து கொண்டனர். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமமான வாய்ப்பளிப்பதை உறுதி செய்வோம்.எங்கும் எதிலும் சமமே என்ற வாசகங்கள் அடங்கிய வில்லையை ஆட்டோக்களின் பின்புறத்தில் ஒட்டி விழிப்புணர்வு பிரச்சாரத்தையும்,விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தையும் தொடக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் மற்றும் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 50 நபர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ்,ஊரகவளர்ச்சி முகமையின் திட்டஇயக்குநர் சா.செல்வக்குமார், உதவி ஆட்சியர்(பயிற்சி) சங்கீதா, சுகாதாரத்துறை இணை இயக்குநர் கோபிநாத் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள்,மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

படவிளக்கம்}எய்ட்ஸ் விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன்

No comments

Thank you for your comments